

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
சென்னை மெரினாவில் முன் னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தநினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.
அதே நோளில், ஜெயலலிதா வின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். சிறை செல்லும் முன்பு ஜெயலலிதா நினைவிடம் வந்து சபதம் எடுத்ததுபோல, விடுதலையான நாளிலும் அவர் ஜெயலலிதா நினைவிடம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் சசிகலா இணைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று அதிமுக தலைமை திட்டவட்டமாக அறிவித்தபோதிலும், சசிகலா விடுதலையை அதிமுக தரப்பு சற்றே கவனத்துடன் உற்றுநோக்கி வருகிறது.
இதை கருத்தில் கொண்டே, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மாவட்டச் செய லாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு ஆதரவாக தெரிவிக்கப்படும் கருத்துகள் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தக் கூடும்; தேவையற்ற சலசலப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அவர் விடுதலை பெற்று வந்தாலும்கூட, அவரைப் பற்றி யாரும் எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்கள் இன்றைய கூட்டத்தில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதுதவிர, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட உள்ளன.