Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியது தற்செயலாகத்தான்; இலங்கை அரசின் கைது நடவடிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

தமிழக மீனவர்கள் ஒருபோதும் வேண்டுமென்றே எல்லை தாண்டுவது கிடையாது என்றும் 4 மீனவர்கள் பிரச்சினை மிகவும் துரதிருஷ்டமானது, கண்டனத்துக்குரியது என்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சி மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், படப்பை பகுதியில் நீர் வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் நோய் அறியும் ஆய்வகம் மற்றும் உணவகக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மீனவர்களுடைய பிரச்சினை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருபோதும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவது கிடையாது.

மீன்களின் ஓட்டத்துக்கு ஏற்பவும், காற்றின் வேகத்துக்கு ஏற்பவும் படகுகள் திசைமாறுவதால்தான் தற்செயலாக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கிறார்கள். அவ்வாறுஎல்லை தாண்டும்பட்சத்தில் இலங்கை அரசு, உடனடியாக இந்திய கடலோரப் படையினர் மற்றும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது மீனவர்களை துன்புறுத்துவது என்பது ஒருபோதும் ஏற்க முடியாத விஷயம். இதுகுறித்து தமிழக முதல்வர், பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமரும் இது குறித்து இலங்கை நாட்டிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் 4 மீனவர்கள் மாயமான விவகாரம் மிகவும்துரதிருஷ்டமானது, கண்டனத்துக்குரியது என்றார்.

அதிமுகவில் தற்போதைய கூட்டணி சுமுகமாக தொடர்ந்து வருகிறது. அதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். சசிகலாபூரண நலம் பெற வேண்டும் என்பது மனிதாபிமானம் உள்ள எவரும் நினைக்கக் கூடிய விஷயம். அந்த வகையில் சசிகலா பூரண நலம் பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x