Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

ஐம்பொன் குதிரை, பைரவர் சிலைகள்: வெள்ளகோவில் குப்பயணசுவாமி கோயிலில் 25-ல் பிரதிஷ்டை

ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட குதிரை சிலைகளுடன் தஞ்சாவூர் சுவாமிமலை சிற்பக்கூட ஸ்தபதிகள்.

தஞ்சாவூர் / திருப்பூர்

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் ரூ.60 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன இரண்டு குதிரை, பைரவர் சிலைகள், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே முத்தூரில் உள்ள குப்பயணசுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை தேவசேனாபதி சிற்பக்கூடத்தில் ஓராண்டுக்கு முன்பு ஐம்பொன்னால் ஆன இரண்டு குதிரைகளையும், பைரவர் வாகனங்களையும் சிலைகளாக வடிவமைத்து தருமாறு, திருப்பூர் மாவட்டம் அரிக்காரன் வலசு, கொங்கப்பட்டி பூசாரி அய்யன் அறக்கட்டளையினர் கேட்டுக்கொண்டனர். அதன்படி, சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதாகிருஷ்ணன், கண்டன், சுவாமிநாதன், சதாசிவம், சந்தோஷ்குமார் ஆகியோர், சிலைகளை வடிவமைத்து வெள்ளகோவிலுக்கு அனுப்பினர்.

இதுதொடர்பாக கொங்கப்பட்டி பூசாரி அய்யன் அறக்கட்டளையைச் சேர்ந்தவரும், மூலனூர் சர்வோதய சங்கத்தில் பணிபுரிபவருமான எஸ்.பூபதி கூறியது:

அத்தனூர் அம்மன் - குப்பயண சுவாமி கோயிலுக்காக இந்த குதிரை மற்றும் பைரவர் சிலைகளை ஐம்பொன்னில் செய்தோம். கடந்த ஆண்டு ஜன.25-ம் தேதி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர், நேர்த்திக்கடனாக கோயிலுக்கு கிடா வெட்டுவது பிரசித்தி பெற்றது.

திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி மேற்கு மாவட்டங்களிலும் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், நாள்தோறும்ஏராளமானோர் வந்து செல்வார்கள். தை மற்றும் மாசி அமாவாசை நாட்களில் 500-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்படும். கரோனா காலம் என்பதால், தற்போது நிறுத்திவைக்கப்பட்டுஉள்ளது.

கோயிலில் மண்ணில் செய்யப்பட்ட குதிரைகள்தான் இருந்தது. குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் மண் குதிரை சிதிலமடையும். இதையடுத்து, 50 ஆண்டுகளாக கோயிலில் அருள்வாக்கு கூறி வந்த கொங்கபட்டி பூசாரி பழனிசாமி கூறியதன் அடிப்படையில், காலத்தால் அழியாத ஐம்பொன்னில் இந்த சிலைகளை செய்தோம். கொங்கப்பட்டி பூசாரி அய்யன் அறக்கட்டளையை சேர்ந்த பக்தர்களின் நிதி பங்களிப்புடன் பெரும் தொகை சேர்ந்தது. ரூ.60 லட்சம் மதிப்பில் தலா இரண்டு குதிரை மற்றும் பைரவர் சிலைகளை தயார் செய்துள்ளோம்.

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற குதிரை மீது ஏறி சுவாமி வரும் என்பது, காலங்காலமாக பின்பற்றப்படும் ஐதீகம், பெரும் நம்பிக்கை. கொங்கபட்டி பூசாரிகளின் தீவிர முயற்சியால் இது சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குதிரை சிலைகள் தலா 9 அடி உயரமும், 3 டன் எடையும், பைரவர் சிலைகள் தலா 3 அடி உயரமும், 150 கிலோ எடையும் கொண்டது. கடந்த 17-ம் தேதி சுவாமிமலையில் இருந்து லாரி மூலமாக, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர் குப்பயண சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து கண்டன் ஸ்தபதி கூறும்போது, “முத்தூர் குப்பயண சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்ய குதிரை, பைரவர் சிலைகள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதைஅடுத்து, இந்த சிலைகளை செய்து கோயிலுக்கு வழங்கியுள்லோம். இந்த சிலைகள், மேற்குறிப்பிட்ட கோயிலில் வரும் 25-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x