Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

ஓசூர் அருகே விபத்துகளை தவிர்க்க புதிய திட்டம்; வனவிலங்குகள் சாலையைக் கடக்க பசுமை மேம்பாலம்: வனத்துறை, போக்குவரத்துத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

ஓசூரில் யானை மீது லாரி மோதியதால் விபத்து ஏற்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கள தணிக்கையில் ஈடுபட்ட வனச்சரகர் ரவி, மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வனத்துறையினர்.

ஓசூர்

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை வனவிலங்குகள் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் பசுமை மேம்பாலம் அமைக்க, வனத்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்தில் உள்ள சானமாவு காப்புக்காட்டை ஒட்டியவாறு பெங்களூரு மற்றும் சென்னை வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில்24 மணிநேரமும் வாகனப்போக்குவரத்து காணப்படுகிறது. வனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்து செல்ல முயற்சிக்கும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.

சாலை விபத்துகளில் இருந்து வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் முதற்கட்ட களத் தணிக்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓசூர் வனச்சரகர் ஆர்.ரவி, ஓசூர் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் (முதல்நிலை) ஏ.விஜயகுமார், வனவர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்று விபத்து நடைபெற்ற இடத்தில் களத்தணிக்கை மேற்கொண்டனர்.

முதல் கட்ட களத்தணிக்கையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வனச்சரகர் ரவி கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி யானை உயிரிழந்த பகுதியில் வாகனங்கள் 40 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுற மும் தானியங்கி ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு அதன் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலையின் இருபுறமும் சோலார் மின் வேலி அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாப்புடன் கடந்து செல்லும் வகையில் பசுமை மேம்பாலம் அமைக்கவும் இந்த முதல் கட்ட களத் தணிக்கை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x