Published : 19 Jan 2021 14:50 pm

Updated : 19 Jan 2021 14:51 pm

 

Published : 19 Jan 2021 02:50 PM
Last Updated : 19 Jan 2021 02:51 PM

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை; டெல்லியில் அதுகுறித்துப் பேசவும் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி

no-intention-to-include-sasikala-in-aiadmk-no-talk-of-it-in-delhi-chief-minister-palanisamy-interview

புதுடெல்லி

சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. அதுகுறித்து பிரதமரிடமோ, அமித் ஷாவிடமோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என முதல்வர் பழனிசாமி டெல்லியில் பேட்டி அளித்தார்.

டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.


பின்னர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

''இன்றைய தினம் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினேன். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு முடித்து வைக்கப்பட்ட பணிகளைத் தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் வரவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், கல்லணை புனரமைப்புத் திட்டம், பவானி உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் திட்டம், முடிந்துள்ள வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும், இந்தியன் ஆயில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். பிரதமர் இசைவு தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களுக்குப் பெரிதும் பயன்படும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் நடந்தாய் வாழி காவேரி திட்டம், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது நிலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை வைத்தேன்.

நிவர், புரெவி புயல் பாதிப்புகள் மற்றும் ஜனவரியில் அதிக மழை காரணமாக விவசாயிகள் பாதிப்புக்கான நிவாரணத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

தமிழ்நாட்டின் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் பெறுவதற்கு அனுமதி கேட்டுள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

இலங்கைச் சிறையிலிருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்று மீதமுள்ளவர்கள் மீட்கப்பட உள்ளனர்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அரசியல் அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினீர்களா?

திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அரசியல் ரீதியாக எந்த விஷயத்தையும் பேசவில்லை. பேசுவதற்கு எந்த நேரமும் இல்லை. இன்னும் தேர்தலுக்குக் காலம் உள்ளது.

தமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜகவினர் சொல்கிறார்களே? உங்கள் கருத்து என்ன?

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அவர்கள் அது குறித்துத்தான் பேசுவார்கள். அதில் தவறில்லை. அவரவர்கள் அவர்களது கட்சி குறித்துத்தான் பேசுவார்கள். சாதாரணக் கட்சியாக இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள். அகில இந்தியக் கட்சிகள் அப்படித்தான் பேசும்.

திராவிடக் கட்சிகளை ஒழிக்கவேண்டும் என்று பேசுகிறார்களே?

கூட்டணி வேறு கொள்கை வேறு. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது நினைப்பதில் தவறில்லை. அது அவர்கள் கட்சிக் கொள்கை.

கூட்டணியில் யார் தலைமை என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதா?

அதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது.

சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா?

ஒன்றும் வாய்ப்பு இல்லை. அவர் அதிமுகவிலேயே இல்லை.

பாஜக அவரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று பேசப்பட்டதா?

யார் சொன்னது? அப்படி வாய்ப்பே இல்லை. அப்படி எல்லாம் பேச்சுவார்த்தையே கிடையாது. நாங்கள் தமிழக வளர்ச்சித் திட்டத்துக்காகவும், நிதி ஒதுக்கீட்டுக்காகவும் சந்தித்தோம். 100% இதைத்தான் பேசினோம்.

சசிகலாவின் சொல்லை அதிமுகவில் மீற மாட்டார்கள் என்று பேச்சு அடிபடுகிறதே?

100% கிடையாது. அதிமுக தெளிவாக முடிவு செய்து நடக்கிறது. கட்சியில் அங்கிருந்து பலரும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

டிடிவி தினகரன் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?

அவரைப் பல ஆண்டுகாலம் ஜெயலலிதாவே நீக்கித்தானே வைத்திருந்தார். அவர் மறைவுக்குப் பின்தானே இவர் வெளியில் வந்தார். பதவி கொடுத்தார்கள். ஜெயலலிதா இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

தவறவிடாதீர்!No intention to include Sasikala in AIADMKNo talk of it in DelhiChief MinisterPalanisamyInterviewசசிகலாஅதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லைடெல்லியில் அதுகுறித்து பேசவும் இல்லைமுதல்வர் பழனிசாமிபேட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x