Published : 01 Oct 2015 03:50 PM
Last Updated : 01 Oct 2015 03:50 PM

திருவாரூரில் நெகிழ வைத்த மனிதநேயம்: பரிதவித்த மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்த மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், மூதாட்டி ஒருவர் பல மாதங்களாக ஆதரவற்ற நிலையில் பரிதவித்து வந்துள்ளார்.

அந்தப் பள்ளியில் 6, 7-ம் வகுப்பு படிக்கும் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களான உமர் முக்தார், ஆகாஷ், கமருதீன், விக்னேஷ்வரன், முகம்மது பயாஸ் ஆகியோர் தினமும் பள்ளிக்குச் செல்லும்போது இதனைக் கவனித்துள்ளனர். அவ்வப்போது மூதாட்டிக்கு சிறு சிறு உதவிகளைச் செய்துள்ளனர். இதனால் மாணவர்களிடம் மூதாட்டி அன்பு பாராட்டி வந்தார்.

உடல் நலம் குன்றியதோடு, வெயில், மழை, பட்டினியாலும் மூதாட்டி அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதைக்கண்ட மாணவர்கள், மூதாட்டியை காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்து, ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரத்தின் உதவியுடன் திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்றோர் காப்பகத்தைத் தொடர்பு கொண்டனர். காப்பக நிர்வாகத்தினரும் மூதாட்டியைக் சேர்த்துக்கொள்ளச் சம்மதித்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மூதாட்டியை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற மாணவர்கள், மருத்துவ பரிசோதனை செய்து, அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தனர்.

பின்னர், மூதாட்டியை பள்ளிக்கு அழைத்து வந்தனர். அங்கு முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நிர்வாகிகள் மாலிக், நடராஜ் சுந்தரம், தாவூது, பாலகுமார் ஆகியோர் மூதாட்டிக்குத் தேவையான பொருட்களை வழங்கினர்.

பின்னர், சிலரது பண உதவியுடன் வாடகைக் கார் ஒன்றை அமர்த்திய மாணவர்கள், அதில் கொண்டு சென்று மூதாட்டியை காப்பகத்தில் சேர்த்தனர். காரில் செல்லும்போது தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றார் அந்த மூதாட்டி.

பரிதவித்த மூதாட்டி மீது அக்கறை கொண்டு, அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த மாணவர்களின் மனிதநேய செயலைக் கண்ட பொதுமக்களும், வியாபாரிகளும் மனம் நெகிழ்ந்து பாராட்டினர்.

உறவினர்கள் இருந்தும்…

இந்த மூதாட்டியின் பெயர் பட்டு(75). அருகில் உள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த துரைசாமி என்பவரின் மனைவி என்பதும், இவருக்கு திருமணமான மகன், மகள் உள்ளதும், அவர்கள் கவனிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x