Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தற்காப்பு கலையை பாடமாக்க வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் தனியார் பள்ளிகளின் ஒருங்கிணைந்த விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. போட்டிகளில் வென்று சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியருடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். படம்: எம்.முத்துகணேஷ்.

தாம்பரம்

பள்ளிகளில் தற்காப்பு கலை பாடமாக்கப்பட வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தாம்பரம் பீர்க்கன்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார். இதில் அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜனும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழிசை, பின்னர் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார். இதைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர் இணைந்து நடத்திய சிலம்ப விளையாட்டுகளை கண்டு மகிழ்ந்ததோடு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ``எங்கள் திருமணத்தின்போது, `தமிழிசை செய்யும் பணிக்கு நீங்கள் குறுக்கே இருக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்' என எனது கணவர் டாக்டர் சவுந்தரராஜனிடம் எம்.ஜி.ஆர் தெரிவித்தார். அதைப் பின்பற்றி எனது கணவர் நடந்ததால்தான் நான் தற்போது ஆளுநராக உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றுவதை பார்க்கும்போது அவர்கள் கரோனாவை ஓட ஓட விரட்டுவது போன்று தோன்றுகிறது.

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு நிச்சயம் தேவை, அவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்க வேண்டும், `தற்காப்பு கலை பள்ளிகளில் பாடமாக்கப்பட வேண்டும்' என தெலங்கானா முதல்வரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன் அதேபோல தமிழக முதல்வருக்கு அந்த கோரிக்கையை விடுக்கிறேன். ஏனென்றால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

`ஓட்டு போடுங்கள், ஓட்டு போடுங்கள்' என்று சொன்ன காலம் போய் தற்போது 'மாஸ்க் போடுங்கள், மாஸ்க் போடுங்கள்' என சொல்லும் நிலை வந்துவிட்டது. என்ன தான் தடுப்பு ஊசி வந்திருந்தாலும் நாம் அனைவரும் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என்றார்.

தெலங்கானா ஆளுநரின் வருகையை ஒட்டி சாலையில் வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பேனர் வைக்க தடை உள்ள நிலையில், மீண்டும் பேனர் கலாச்சாரம் உருவெடுத்திருப்பது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x