Published : 17 Jan 2021 03:14 am

Updated : 17 Jan 2021 07:15 am

 

Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 07:15 AM

வெற்றிநடை போடும் தமிழகத்தை காத்திட எம்ஜிஆரின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

ops-eps

சென்னை

வெற்றிநடை போடும் தமிழகத்தை காத்திட எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளில் சபதம் ஏற்போம் என அதிமுகவினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர்கள் நேற்று எழுதியுள்ள கடிதம்:


அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாள், தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்பொன்னாள். வறுமையின் கோரப்பிடியில் வாடிய இளமைக்காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தை தொட்டு, உழைப்பாலும், முயற்சியாலும், தன்னலம் துறந்து,பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கைமுறையாலும் ‘மனிதரில் மாணிக்கம்’ என்ற புகழ் பெற்ற சரித்திர நாயகர்.

சொன்னதை எல்லாம் செய்துகாட்டிய செயல் வீரர். உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம், பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனிஇடஒதுக்கீடு, கிராம நிர்வாக அலுவலர் என்னும் புதுப் பதவி மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி, கம்ப்யூட்டர் காலத்திலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் அவர் நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் அத்தனை எளிதாக செய்திட முடியாத அரும் பெரும் சாதனைகளாகும்.

அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் எம்ஜிஆர் வழங்கிய மாபெரும் கொடையாக வந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சிசெய்தவர் ஜெயலலிதா. அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் இன்றும், இனிவரும் காலங்களிலும் அதிமுக வெற்றிநடை போடும் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

அதிமுக அரசியல் கட்சி மட்டுமல்ல, சமூக மாற்றத்துக்கான இயக்கம். ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயம் அமைத்து, சமதர்மம் காத்து தமிழ் இனம் இந்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்திட, ஓயாது பாடுபடும் இயக்கம்தான் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அதிமுக.

இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்னும் ஜனநாயக போர்க்களத்தை சந்திக்கப் போகிறோம். தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக, இந்தத் தேர்தல் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம். திமுக நடத்தத் துடிக்கும் வன்முறை வெறியாட்டம் மீண்டும்தலைதூக்க முடியாத வண்ணம்தேர்தல் களத்தில் நாம் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டிய நேரமிது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடத்திய,இன்று நாமும் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தொடர்ந்திட எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளில், வெற்றிநடை போடும் தமிழகத்தைக் காத்திட அனைவரும் சபதம் ஏற்போம். கடுமையாக களப்பணி ஆற்றுவோம், வெற்றி காண்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


எம்ஜிஆரின் பிறந்தநாளில் சபதம்ஓபிஎஸ்இபிஎஸ்அதிமுகOps eps

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x