

புதுச்சேரியில் இன்று புதிதாக 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன 16) தெரிவித்திருப்பதாவது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,146 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-8, மாஹே-8 பேர் என மொத்தம் 16 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும் புதுச்சேரி தவளக்குப்பம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், மாஹேவைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது.
இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 611 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 114 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 172 பேரும் என மொத்தம் 286 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 683 (97.60 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 468 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 89 ஆயிரத்து 402 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.