Published : 21 Oct 2015 10:51 AM
Last Updated : 21 Oct 2015 10:51 AM

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நாடு முழுவதும் மகளிருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. டெல்லி உட்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதரீதியில் மக்களை பிளவுபடுத்துவது அதிகரித்து வருகிறது.

எழுத்தாளர்கள், அறிஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்கும் நிலை உள்ளது. தாத்ரி சம்பவம் தொடர்பாக பல நாட்கள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறினார். விலைவாசி உயர்வு உட்பட மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு பதில் கூறாமல் அவர் மவுனம் காத்து வருகிறார்.

ஆனால் அவரது அமைச்சர்கள், கட்சியினர் பிரிவினையைத் தூண் டும் வகையில் பேசி வருகின்றனர். அவர்களது கூட்டணி கட்சிகளும் வரம்பு மீறி செயல்படுகின்றன. பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தரப்படும என தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் வெளிநாடுகளுக்கு செல்வதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் தற்போதுள்ள ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை என்.ஆர்.காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. வேலை யின்மை, தொழில் வளர்ச்சி பாதிப்பு, குற்றச் செயல்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

புதுச்சேரியில் பலமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. வரும் 2016-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் மகளிர் காங்கிரஸின் செயல்பாடுகள் இருக்கும். வரும் தேர்தலில் மகளிருக்கு அதிக பிரதிநிதித்துவம் பெற முயல்வோம்.

தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு என தனியாக வாக்கு வங்கி உள்ளது. பல்வேறு சிறந்த தலைவர்கள் உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் வகையில் நாங்கள் செயல்படுவோம். பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

தமிழகத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் திறமையான குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள். நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் நாராயணசாமி, மாநில தலைவர் நமச்சிவாயம், மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் பிரேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x