Last Updated : 07 Oct, 2015 12:55 PM

 

Published : 07 Oct 2015 12:55 PM
Last Updated : 07 Oct 2015 12:55 PM

நெல்லையை மீண்டும் மிரட்டும் டெங்கு காய்ச்சல்: மூன்று குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசுத்துறைகள் தற்போது தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தாளார்குளத்தை சேர்ந்த 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் காய்ச்சல் காரணமாக பலர் இறந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடக்கத்திலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பு திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உடனே தொடங்கப்படவில்லை. அப்போது மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

40-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் இம்மாவட்டத்துக்கு 3 முறை வந்திருந்து நிலைமையை ஆய்வு செய்து, நோய் தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டார்.

சிறப்பு வார்டு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 3 சிறப்பு வார்டுகளும் தொடங்கப்பட்டன. கொசுவை ஒழிக்க புகை மருந்து அடித்தல், தண்ணீரில் மருந்து தெளித்தல் ஆகிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து டெங்கு கட்டுக்குள் வந்தது.

மீண்டும் டெங்கு பாதிப்பு

ஆனால், இந்த நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தொடர்ந்து மேற்கொள்ளாததால், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தின்போது டெங்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அந்த வகையில், கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலர் சிகிச்சைபெற வருகின்றனர். ஆனால், நிலவேம்பு கசாயம் வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை போதிய அக்கறை காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசுத்துறைகளுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான், நோய் பரவுவதை தடுக்க முடியும். ஆனால், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத சூழ்நிலையே தற்போது நிலவுகிறது.

3 பேருக்கு டெங்கு

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ராம்கணேஷ் நேற்று கூறியதாவது:

முக்கூடல் அருகே தாளார்குளத்தில் காய்ச்சலால் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர், சிறுமியர், குழந்தைகள். இவர்களுக்கு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் 9 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 6 பேர் சிகிச்சை பெற்று திரும்பிவிட்டனர். தற்போது தாளார்குளத்தை சேர்ந்த 3 குழந்தைகள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே தாளார்குளத்தில் காய்ச்சலால் உயிரிழந்த 2 சிறுவர்களில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது உறுதியாகியிருந்தது.

சிறப்பு முகாம்

கடந்த 20 நாட்களாக இந்த கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.

மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை சிறப்பு பணியாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறோம். தாளார்குளம் கிராமத்தைத் தவிர்த்து மாவட்டத்தில் மற்ற இடங்களில் டெங்கு பாதிப்பு ஏதும் இல்லை என்றார் அவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x