Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

உற்பத்திக்கான விலை கிடைக்காததால் பொங்கல் பண்டிகையில் விவசாயிகளுக்கு இனிக்காத கரும்பு: ஆண்டுதோறும் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது

உற்பத்திக்கான போதிய விலை கிடைக்காத நிலையில், கரும்பு விவசாயிகள் வெல்லம் தயாரிப்பில் ஆர்வம் காட்டுவதும் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து விவசாயிகள் வாழ்வில் பொங்கலுக்கு இனிப்பான கரும்பு கசக்க ஆரம்பித்துள்ளது.

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பும் வெல்லமும் இல்லாமல் கொண்டாட்டம் இருக்காது. பொங்கல் பண்டிகையுடன் மஞ்சள், கரும்பு விவசாயமும் சேர்ந்தே இருக்கிறது. தை மாதத்தில் முழு வீச்சில் தொடங்கும் கரும்பு அறுவடை சித்திரை மாதம் வரை தொடருகிறது. கரும்பு விவசாயம் வெல்லம் தயாரிப்பு, சர்க்கரை உற்பத்தியை சார்ந்துள்ளது.

ஒரு சில இடங்களில் மார்கழி மாதமே கரும்பு அறுவடையை தொடங்கி வெல்லம் தயாரிக்கும் வேலையை ஆரம்பித்து விடுவார் கள். ஆலையில் பிழியும் கரும்புச் சாறை கொப்பரையில் ஊற்றி பதமாக காய்ச்சி உருண்டை வெல்லம் தயாரிப்பு பல கட்டங்களை கடந்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயம் ஒரு காலத்தில் லாபம் கொடுக்கும் பணப் பயிராக இருந்தது. பாலாறும் அதை நம்பியுள்ள நீர்பாசன ஏரிகளும் கரும்பு செழித்து வளர காரணமாக இருந்தன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயம் செழித்ததற்கு வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அமைக்கப்பட்டதை உதாரணமாக கூறலாம். ஆனால், இன்று கரும்பு விவசாயிகளின் நிலை மாறிக்கொண்டே வருகிறது.கரும்பு விவசாயம் இனிக்காத தொழிலாக மாறி வருவதால் கரும்பு சாகுபடி பரப்பளவு படிப்படி யாக குறைந்து வருவதுடன் வெல்லம் தயாரிப்பு பணியும் சுருங்கிக்கொண்டே வருகிறது.

லாபம் ஈட்டாத வெல்லம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் கவசம்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு மழை இல்லாததால் கரும்பு சாகுபடி குறைவாக இருந்தது. இதனால், ஆலைக்கு போதுமான கரும்பு இல்லாததால் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் கரும்புகளை வாங்கி வெல்லம் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளோம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் மழை பெய்துள்ளதால் இந்தாண்டு விவசாயிகள் பலரும் கரும்பு நட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், வெல்லத்துக்கான விலையும் பெரிய அளவில் இல்லை. கரும்பு வெட்டு கூலி, வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் கூலி என எல்லாம் கணக்கிட்டால் பெரிதாக லாபம் கிடைப்பதில்லை. வெல்லம் தயாரிப்புக்கு பதிலாக நாட்டு சர்க்கரை தயாரிக்கலாமா? என்ற யோசனையும் உள்ளது’’ என்றார்.

ஏற்கெனவே சர்க்கரை ஆலை களுக்கு கரும்பு ஒப்பந்தம் செய் வது லாபமாக இல்லை என கூறப் படுகிறது. கரும்பு சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைவதால் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு சப்ளையும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால், ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழு வீச்சில் இயக்க முடியாத நிலை உள்ளது. வேலூர் சர்க்கரை ஆலைக்கு வெளியூர்களில் இருந்து கரும்பை இறக்குமதி செய்து ஆலையை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் வெல்லம் உற்பத்தியும் போதிய அளவுக்கு விலை கிடைக்காமல் இருப்பது விவசாயிகளை யோசிக்க வைத்துள்ளது.

கரோனாவால் மந்தம்

வேலூர் வெல்லம் மண்டி உரிமையாளர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘கரோனாவால் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங் களுக்கு வெல்லத்தை அனுப்ப முடியவில்லை. இப்போதைக்கு சென்னை, வேலூர் மாவட்டத்தில் மட்டுமே வெல்லத்தை விற்க வேண்டியுள்ளது.

முதல் ரகம் வெல்லம் கிலோ ரூ.45-க்கும், இரண்டாம் ரகம் ரூ.40 விலையில் விற்கப் படுகிறது. பொங்கல் பண்டிகை யாக இருந்தாலும் தீபாவளிக்கு விற்பனையான விலையிலேயே இப்போது வெல்லம் விற்கப்படு கிறது. பெரிய அளவில் வெல்லத்தை இருப்பு வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x