Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

போக்குவரத்து ஊதிய ஒப்பந்த விவகாரம்: பொங்கலுக்கு பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடக்கும் என நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இதையடுத்து, சென்னை குரோம்பேட்டையில் கடந்த 5-ம் தேதி, புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் மற்றும்தொமுச, அ.தொ.பே, சிஐடியு,ஏஐடியுசி உட்பட 67 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிர்வாகம் தரப்பில் ஏற்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, 14-வது ஊதிய ஒப்பந்தத்தை இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தக் கோரி போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கிடையே, அரசு போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தியுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறியபோது, ‘‘14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பொங்கலுக்கு பிறகுபேசப்படும் என நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்பதால், போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை இம்மாதஇறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வைத்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x