Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM

ரேஷன் கடை மேற்பார்வையாளரை ஆட்டோவில் கடத்தி பொங்கல் பரிசு பணம் ரூ.5 லட்சத்தை வழிப்பறி செய்த பெண்கள்

சென்னை

ரேஷன் கடை மேற்பார்வையாளரை ஆட்டோவில் கடத்தி பொங்கல் பரிசு கொடுக்க வைத்திருந்த ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பிய ஆட்டோ கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (44). சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதிஒன்றில் தங்கி, கோயம்பேட்டில் உள்ள2 ரேஷன் கடைகளில் மேற்பார்வையாளராக உள்ளார். தற்போது, பொங்கல் பண்டிகையொட்டி, தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக, கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்கி வருகிறது. அதற்கான தொகை,8 லட்சம் ரூபாயை பை ஒன்றில் பாஸ்கர் வைத்திருந்தார்.

இந்த பணத்துடன், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், தேனாம்பேட்டையில் இருந்து அரசு பேருந்தில் பாஸ்கர் கோயம்பேடு சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள ‘டாஸ்மாக்’ கடையில் நண்பர் ஒருவருடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

போலீஸில் புகார் என மிரட்டல்

பின்னர் மீண்டும் பேருந்தில் தேனாம்பேட்டைக்கு செல்ல தனியாக நடந்துசென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த 2 இளம் பெண்களில் ஒருவர் அவரை தவறான உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, “வர மறுத்தால் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்” என அந்த இளம் பெண் மிரட்டியுள்ளார்.

அந்த வழியாக ஆட்டோவில் வந்த மேலும் சிலரும் அந்த இளம் பெண்ணுக்கு ஆதரவாக பேசி பாஸ்கரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கூறி அந்த 2 இளம் பெண்களுடன் பாஸ்கரையும் ஆட்டோவில் கும்பல் பாரிமுனைக்கு கடத்தி சென்றுள்ளது.

பின்னர் அவரை மிரட்டிய அந்த பெண்கள் பூந்தமல்லி சாலையில், அடுத்தடுத்து 3 இடங்களில் உள்ள, ஏ.டி.எம். இயந்திரங்களில், பாஸ்கரிடம், ரூ.4 ஆயிரம் எடுக்கச் சொல்லி பறித்துள்ளனர். பணம் எடுக்க பாஸ்கர் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு செல்லும் போது, தன்னிடம் இருந்த பையை ஆட்டோவில் விட்டுச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த பையில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த பெண்களும் ஆட்டோ ஓட்டுநரும், பாஸ்கரிடம் நைசாக பேச்சு கொடுத்து, ரூ.8 லட்சத்தில் ரூ.5.15 லட்சத்தை சுருட்டிக் கொண்டு அவரை, இரவு 10.30 மணியளவில், பாரிமுனையில் உள்ள வங்கி ஒன்றின் அருகே இறக்கிவிட்டு தப்பினர்.

சற்று நேரத்துக்கு பிறகு பணம் வழிப்பறி செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் இதுகுறித்து நேற்று காலை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் உண்மையா?

இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆட்டோவில் வந்த கொள்ளை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். பாஸ்கர் சொல்வது உண்மையா? அல்லது பெண்களிடம் ஏதாவது ஒருவகையில் இவர் ஏமாற்றப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x