Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

தேர்தல் ஏற்பாடு, வாக்காளர் பட்டியல் பணி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரத சாஹு ஆலோசனை

சென்னை

சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. இதையொட்டி, சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முன்னதாக, கடந்த நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. ஆன்லைனிலும், நேரடியாகவும், சிறப்பு முகாம்களிலும் பெறப்பட்ட 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும் 20-ம் தேதி இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், தற்போதைய கரோனாசூழலில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்பதால், ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. இதனால், தற்போதுள்ள 67,324 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதுதவிர, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் இப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்டதேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று மாலை 3 மணிக்கு, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் பங்கேற்றார்.

2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை சத்யபிரத சாஹு வழங்கியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x