Published : 24 Jun 2014 10:18 AM
Last Updated : 24 Jun 2014 10:18 AM

போதிய கழிப்பறை வசதியின்றி புறநகர் ரயில் நிலையங்கள்: திறந்தவெளி பயன்பாட்டால் சுகாதார சீர்கேடு: பயணிகள் அவதி

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. ஒருசில ரயில் நிலையங்களில் கழிப்பறை கட்டியும் அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருக்கிறது. எனவே, இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அத்துடன், ரயில் நிலைய வளாகங்களின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை ஏராளமான அளவில் உருவாகி வருகின்றன. மேலும், சென்னை நகரில் இடநெருக்கடி, அதிகப்படியான வீட்டு வாடகை உள்ளிட்ட காரணங்களால், பொது மக்கள் அதிகளவில் புறநகர் பகுதிகளில் குடியேறி வருகின்றனர். அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவை களுக்காக தினம்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.

புறநகர் ரயில் சேவை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொதுமக்க ளின் தேவையைக் கருத்தில் கொண்டு, தென்னக ரயில்வே, புறநகர் ரயில்களை அதிகளவில் இயக்கி வருகிறது. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் மொத்தம் 29 ரயில் நிலையங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில் நாளொன்றுக்கு 175-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப் படுகின் றன. இவற்றில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.

ஆனால், இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. இதுகுறித்து, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ்ச் செல்வன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும்தான் கழிப்பறை வசதிகள் உள்ளன. மற்ற ரயில் நிலையங்களில் இவ்வசதி இல்லை. திருமுல்லைவாயல் மற்றும் புட்லூர் ரயில் நிலையங்களில் கழிப்பறைக் கான கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

சென்னையில் இருந்து அரக் கோணத்துக்கு ரயிலில் செல்வதற்கு இரண்டுமணி நேரம் ஆகிறது. பயணத்தின் போது இயற்கை உபாதைகள் கழிக்க பயணிகள் மிகவும் சிரமப் படுகின்றனர். அதிலும் பெண் பயணிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, பட்டரவாக்கம், கொரட்டூர் மற்றும் புட்லூர் ஆகிய ரயில் நிலையங்களை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் பெண்கள் அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட நீண்ட தூரத்தில் இருந்து வருகின்றனர்.

அதேபோல், தற்போது பெரும்பாலானவர் கள் நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி உள்ளது. இவர்கள் ரயிலில் பயணம் செய்யும் போது, கழிவறை இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். வில்லி வாக்கம், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்கள் ஆகும். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையங்களில்கூட கழிப்பறை வசதி இல்லாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார சீர்கேடு

அம்பத்தூரை சேர்ந்த ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ராஜன் இதுபற்றி கூறுகையில், “ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்க ளில் கட்டணக் கழிப்பிடங்கள் உள்ளன. காசு கொடுத்து இவற்றை பயன்படுத்த வேண்டியுள்ளதால், பெரும்பாலான பயணி கள் இவற்றை பயன்படுத்த தயக்கம் காட்டுகின் றனர். இதனால், அவர்கள் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள திறந்தவெளி பகுதிகளில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதன் காரணமாக, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் இலவச கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தலாம்’’ என்றார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் வசதியை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இவற்றை ஏற்படுத்து வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x