Last Updated : 07 Jan, 2021 03:14 PM

 

Published : 07 Jan 2021 03:14 PM
Last Updated : 07 Jan 2021 03:14 PM

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை: 20 வீடுகள் இடிந்து சேதம்; ஆட்சியர் ஆய்வு

சுண்ணாம்புக் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். | படங்கள்: ஜெ.மனோகரன்.

கோவை

கோவை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், 20 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று (ஜன.6) மாலை சுமார் 7 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது. இரவு 2 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. வழக்கத்தைக் காட்டிலும் கனமழை பொழிந்ததால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் தங்கள் வண்டிகளை ஓட்டிச் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை, சத்தி, அவிநாசி, பொள்ளாச்சி சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, புரூக் பாண்ட் சாலையில் உள்ள ரயில்வே பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போலத் தேங்கியது.

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இடிந்து விழுந்த கட்டிடம்.

சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம், அன்னூர், பேரூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை, வெங்காயம், காய்கறிப் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நொய்யல் ஆறு, சுண்ணாம்புக் கால்வாய் ஆகியவற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர்க் குழாய்கள் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிகள், தூர்வாரத் தோண்டப்பட்ட கழிவுநீர்க் கால்வாய்களில் மழை வெள்ளம் தேங்கியது.

இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில இடங்களில் சாலைகளில் ஏற்பட்ட விரிசல்களில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன. புறநகர்ப் பகுதிகளிலும் இதே நிலை ஏற்பட்டது. திடீரெனத் தொடர்ந்து 7 மணி நேரமாகக் கொட்டித் தீர்த்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 588 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

புரூக்பாண்ட் ரோடு ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழ் குளம்போல் தேங்கிய மழைநீர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்டப் பேரிடர் மேலாண்மைத் துறையினர் கூறும்போது, ''அன்னூரில் 15 மி.மீ., மேட்டுப்பாளையத்தில் 23.1 மி.மீ., சின்கோனாவில் 15 மி.மீ., சின்னக் கல்லாறில் 42 மி.மீ., வால்பாறை பிஏபி பகுதியில் 20 மி.மீ., வால்பாறையில் 18 மி.மீ., சோலையாறில் 17 மி.மீ., ஆழியாறில் 11 மி.மீ., சூலூரில் 37 மி.மீ., பொள்ளாச்சியில் 36 மி.மீ., கோவை தெற்கு பகுதியில் 92 மி.மீ., விமான நிலையத்தில் 112.8 மி.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 82 மி.மீ., தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x