Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னை

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் தார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உடன் இருந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

முதல்வர் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே, 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை டிச.8-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

இந்த ஒத்திகையில் காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும்அறை, கண்காணிப்பு அறை ஆகியவைகளின் வடிவமைப்பு போன்றவை குறித்து ஆராயப்படும். தடுப்பூசி போடுவதற்கான வசதிகள், தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடும்போது எவ்வளவு நேரம் ஆகும் என்பதும் ஒத்திகை பார்க்கப்படும். தமிழக அரசு சார்பில், 2020 ஜூன் மாதம் முதலே தடுப்பூசிக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 38 மாவட்டங்களில் 51 இடங்களில் தடுப்பூசிகள் வைப்பதற்கான குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தடுப்பூசிகள் போடுவதற்காக 17 லட்சம் ஊசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும், மத்தியஅரசு முதற்கட்டமாக 33 லட்சம் ஊசிகளை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. அதில், 28 லட்சம் ஊசிகள்வந்துள்ளன. இவை மாவட்டவாரியாக பிரித்து வழங்கப்படும். மத்தியஅரசு எப்போது தடுப்பூசிக்கான மருந்தை அளிக்கிறதோ, மறுநாளே தடுப்பூசி போடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கும்.

முன்னுரிமை அடிப்படையில் 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு 2,850 மையங்களில் தினமும் 100 பேர் வீதம் தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் 2.50 கோடி தடுப்பு மருந்துகளை சேமித்து வைத்துக் கொள்ள போதுமான வசதிகள் உள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி போடப்படும். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசிக்கப்படும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x