

புதுச்சேரியில் கடந்த 2020-ம் ஆண்டில் இயல்பை விட அதிக மழைப் பொழிவு இருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் ஆண்டின் சராசரி மழை அளவு 1,200 மி.மீ ஆகும். கடந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. குறிப்பாக 2020 ஜனவரி முதல் டிசம்பர் வரை 1,728.60 மி.மீ மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவான 1,200 மி.மீட்டரை விட 528.6 மி.மீ கூடுதலாகும். இவற்றில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 328.20 மி.மீ மழையும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 1,400.4 மி.மீ மழையும் பொழிந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 2015க்குப் பிறகு அதிகமான மழைப் பொழிவு இதுவாகும்.
ஆண்டு சராசரியைத் தாண்டி கூடுதலாக மழை பெய்ததால் புதுச்சேரியின் 84 நீர்நிலைகளில் பெரிய ஏரியான ஊசுட்டேரி, இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி உட்பட 70க்கும் மேற்பட்டவை நிரம்பின. புதுச்சேரி பகுதி முழுவதும் சராசரியாக 20 அடி அளவுக்கு நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 21 அடி அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் அதிகளவாகும்.
புதுச்சேரியில் 7.2 செ.மீ மழைப் பொழிவு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரை கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடானது. இந்திரா காந்தி சதுக்கம், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. பாகூர், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், திருக்கனூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பொழிந்தது. இதனால் கடலூர்-புதுச்சேரி பிரதான சாலையிலும் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனமழையால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
ஏற்கெனவே கடந்த மாதம் கொட்டிய கனமழையால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருந்த நிலையில், தற்போது பெய்யும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 7.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது, ஜனவரி மாதத்தில் பொதுவாக புதுவையில் பெரிய அளவிலான மழைப் பொழிவு இருக்காது. ஆனால், வளிமண்டல மேலடுக்குச்சுழற்சி காரணமாக கடந்த 3-ம் தேதியில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாகநேற்று முன்தினம் அதிகாலை முதல் நேற்று நண்பகல் வரை கனமழை பெய்தது. நேற்று காலையிலும் கனமழை தொடர்ந்தது. தொடர் மழையால் கடந்த 4 நாட்களில் 104.2 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.
வரும் 10-ம் தேதி வரை மழைநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் மேலும் மழையின் அளவு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. தற்போது, புதுச்சேரியில் 26 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. நல்ல மழைப்பொழிவால் நடப்பாண்டில் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும், மற்ற பயன்பாடுகளுக்கும் பிரச்சினை இருக்காது என்று பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் குறிப் பிடுகின்றனர்.