Published : 06 Jan 2021 03:12 AM
Last Updated : 06 Jan 2021 03:12 AM

வடகிழக்குப் பருவமழை நீடிப்பதால் நீர் ஆதாரங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நீடிப்பதால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய வடகிழக்குப் பருவமழை ஜனவரியிலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள் பல நிரம்பியுள்ளன. அனைத்து நீர் நிலைகளிலும் நீர் இருப்பும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் தவிர 37 மாவட்டங்களில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 266 பாசன ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 564 ஏரிகளில் 500 ஏரிகள் நிரம்பி விட்டன. காஞ்சிபுரத்தில் 381 ஏரிகளில் 326-ம், தஞ்சாவூரில் 640ஏரிகளில் 465-ம், திருநெல்வேலியில் 781 ஏரிகளில் 212-ம், தென்காசியில் 543 ஏரிகளில் 232-ம், திருவண்ணாமலை 697 ஏரிகளில் 288 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பி யுள்ளன.

தமிழகத்தில் 698 ஏரிகளில் 91 சதவீதம் முதல் 99 சதவீதமும், 843 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.

1,346 ஏரிகளில் 71 முதல் 80 சதவீதமும், 1,555 ஏரிகளில் 51 முதல் 70 சதவீதமும், 2,237 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 2,756 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. 438 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களில் உள்ள 90 நீர்த் தேக்கங்கள், அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும். தற்போது இவற்றில் 164 டிஎம்சி (73.40 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x