Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு; சுற்றுச் சூழலை பாதுகாக்க 7 அம்ச வாக்குறுதி: சேலத்தில் வெளியிட்டார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

நமக்கு தொழிற்சாலைகள் வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்ககூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 7 அம்ச வாக்குறுதிகளை அளிக்கிறோம்.

மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு விதிகளை வகுப்பதன் மூலம் நீர், நெகிழி, மின் கழிவு போன்ற பொருட்களுக்கு ஒரு சுழற்சி பொருளாதாரம் ஏற்படுத்தப்படும். குடிசைத் தொழில்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களால் நெகிழி இல்லாத மாற்று உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, அனைத்து மாசு கண்காணிப்புத் தரவுகளும், ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகண்காணிக்கப்படும். விரிவான மற்றும் கடுமையான நிலத்தடி நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். உள்ளூர் மக்கள் அடங்கிய சுற்றுச்சூழல் குழுக்கள் தொடங்கப்படும்.

எட்டு வழிச் சாலை திட்டத்தை நாங்கள் எதிர்ப்போம். எட்டுவழிச் சாலைத் திட்டத்தில், ஒன்றரை லட்சம் பனைமரங்கள், 2 லட்சம் தென்னை மரங்கள், 500 வீடுகள் அழிக்கப்படும். அப்படி அமைக்கப்பட்ட சாலையில் அதிவேகமாக சேலம் வரலாம். மலைகளை வெட்டி கனிமவளங்களை விரைவாக எடுத்துச் செல்லலாம். இப்படிப்பட்ட அதிவேக சாலை எதற்காக தேவை.

காப்பியடித்து விடுவார்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை, மேம்படுத்த எங்களிடம் திட்டம் உள்ளது. நல்லவர்களால் தான் அதனை செயல்படுத்த முடியும். அத்திட்டத்தை இப்போதே கூறினால், அவர்கள் காப்பியடித்து விடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியின் மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாநில செயலாளர் உமா தேவி, மாநில பொதுச் செயலாளர்கள் மவுரியா, சந்தோஷ் பாபு, முருகானந்தம், சூழலியல் பிரிவு மாநில செயலாளர் பத்ம பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x