Published : 04 Jan 2021 03:19 AM
Last Updated : 04 Jan 2021 03:19 AM

இந்தியாவில் பினாமிகள் மூலம் தொழில் செய்யும் சீனர்கள்: உளவுத் துறை தீவிர விசாரணை

சீனாவை சேர்ந்தவர்கள் பினாமிகள் மூலமாக இந்தியாவில் பல நிறுவனங்கள் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுதொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள மத்திய உளவுத்துறை அதிகாரிகள் இதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

உடனடியாக கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள் மூலம்பல முறைகேடுகள் நடப்பதாகவும், அதிக வட்டி வசூலிக்கும் அவர்கள், கடனை திருப்பி செலுத்தாதவர்களை அநாகரிகமாக மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

தகவல்கள் திருட்டு

பெங்களூருவில் ‘ட்ரூ கிண்டில் டெக்னாலஜி’ என்ற பெயரில் 110 ஊழியர்களுடன் அழைப்பு மையம் செயல்படுவதும், பல்வேறு பெயர்களில் செயல்படும் செயலிகள் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு இவர்கள் அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மையத்தை நடத்திவரும் பிரமோதா, பவான் மற்றும் இதன்உண்மையான உரிமையாளர்களான சீனாவை சேர்ந்த ஜியா யமாவ், யுவான் லூன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் கடன் வழங்கும் பல நிறுவனங்களை சீனாவில் உள்ள ஹாங் என்ற நபர் நடத்துகிறார். அதேபோல, சீனாவை சேர்ந்தவர்கள் பினாமிகள் மூலம் இந்தியாவில் பல நிறுவனங்கள் நடத்திவருகின்றனர். கடன் வாங்கியவர்களின் செல்போன்களில் உள்ள தகவல்களை திருடியதன் மூலம், இந்தியாவில் பல லட்சம் பேரின் தகவல்களை சீன நிறுவனங்கள் திருடியுள்ளன என்பது உட்பட பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனங்கள் மூலம் இந்தியா தொடர்பான முக்கிய தகவல்களை சீனாவுக்கு அனுப்பி உள்ளனரா, இந்தியாவின் கடல்வழி நுழைவுவாயிலாக இருக்கும் தென் இந்தியாவில் சீனர்கள்அதிக நிறுவனங்கள் நடத்தகாரணம் என்ன, இந்த நிறுவனங்களில் சீன உளவாளிகள் பணிபுரிகிறார்களா என்பது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகள்விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தற்போது கடன் செயலி விவகாரத்தில் சீனாவை சேர்ந்த பினாமி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் சிக்கியிருப்பது குறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அதிகாரிகள் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x