Last Updated : 03 Jan, 2021 08:46 AM

 

Published : 03 Jan 2021 08:46 AM
Last Updated : 03 Jan 2021 08:46 AM

நலத்திட்டங்கள் என்ற பெயரில் கூடுதல் பணிச்சுமை: ஆதங்கத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள்

சில வருடங்களாகவே அரசின் சிறப்பு நலத் திட்ட உதவிகள் ரேஷன் கடைகள் மூலமாகவே செயல்படுத்தப்படுவதால், பணிச் சுமை கூடி, மனச்சுமையும் அதிகரித் திருப்பதாக கடலூர், விழுப்புரம் மாவட்ட நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆதங்கப் படுகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. இந்த முறை ரூ. 2,500 விநியோகிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 942 குடும்ப அட்டைதாரர்களுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் நியாய விலைக் கடை பணியாளர்கள் இதற்கான டோக்கனை விநியோகம் செய்தனர். தொடர்ந்து இந்த ஊழியர்கள் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 5 அடி நீளமுடைய ஒரு முழு கரும்பு, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய துணிப்பையை தயார் செய்யும் பணியை கூடுதல் பணியாக எடுத்துச் செய்தனர்.

இந்தப் பணிகள் முடிந்து தற்போது ரொக்கப் பணத்துடன் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி விட்டது.
ஏற்கெனவே பணியாளர் பற்றாக்குறை, கூடுதல் பணிச்சுமை என ஆதங்கத்தில் இருக்கும் இந்த ஊழியர்கள் தங்கள் பெயரை குறிப்பிடாமல் இந்த கூடுதல் பணி பற்றி வருத்தத்துடன் பேசினர்.

“அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் எங்களை வாட்டி வதைக்கின்றனர்.
நடப்பு பணிகளோடு பொங்கல் தொகுப் புக்கான பொருட்களை நாங்களே சென்று வாங்கி வர வேண்டும், அதை நாங்களே ‘பேக்கிங்’ செய்ய வேண்டும், டோக்கனும் நாங்களே வீடு தேடி சென்று வழங்க வேண்டும், நடப்பு பொருட்களோடு பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் வேட்டி சேலையையும் முறையாக வழங்க வேண்டும்.

இதை இயன்ற வரையில் சரியாகவே செய்து வருகிறோம். எங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக மட்டும் 22 துறை சார் குழுக்களை நியமித்திருக்கின்றனர்.

அதிகாரிகளிடம்ட இருந்து தேவைக்கு அதிகமான கெடுபிடி வருகிறது. ‘இந்த விநியோகம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து எந்த புகாரும் வரக்கூடாது, அரசியல் பிரமுகர்களை கடையினுள் அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் வடக்குத்து ரேஷன் கடையில் இருந்த பெண் ஊழியரை, அங்கிருக்கும் ஆளும்கட்சி பிரமுகர் தாக்கியுள்ளார்.
அந்த ஊழியர் இதுபற்றி நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ‘பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், காவல் நிலையத்தில் அளித்தப் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்’ என மிரட்டு கின்றனர்.

கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் எங்களுக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் மட்டுமே. ஆனால் உணவுத் துறையின் கீ்ழ் பணி
யாற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. ‘நியாய’ விலைக் கடை ஊழியர்களான எங்க ளுக்கு மிகப் பெரிய ‘அநியாயம்’ நடக்கிறது.

கடந்த வாரங்களில், ‘பயோ மெட்ரிக்’ முறையில் சர்வரில் ஏற்பட்ட பிரச்சினையால், பல இடங்களில் பொது மக்கள் எங்களிடம் சண்டை போடும் நிலைமை ஏற்பட்டது.

அதற்கு மத்தியில் எங்களுக்கு இந்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு விநியோகம் கூடுதல் பணிச் சுமை. இதனால் சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை எங்களுக்கு துக்க நாளாக மாறி விட்டது. எங்களுக்காக இயங்கி வருவதாகக் கூறும் சங்கமோ, எங்களை அடகு வைக்கும் நிலையில் தான் செயல்படுகிறது..

உள்ளூர் ரவுடிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இருந்தாலே பொதுமக்களுக்கு அனைத்துப் பொருட்களும் உரிய நேரத்தில் கிடைத்துவிடும், பொது மக்களும் அதிகாரிகளும் எங்கள் சூழலைப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்“ என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x