Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் அரசியல் மாநாடு சென்னையில் 6-ம் தேதி நடக்கிறது; அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு

திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் வரும் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் அரசியல் மாநாட்டில் பங்கேற்க ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் வரும் 6-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் ‘இதயங்களை இணைப்போம்’ என்ற பெயரில் அரசியல் மாநாடு நடக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

திமுக கூட்டணியில் தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. எஸ்டிபிஐ திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. உருது மொழி பேசும் முஸ்லிம்களின் வாக்குகளை ஒவைசி கட்சி பிரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுவதால் அக்கட்சியையும் திமுக கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெறும் அரசியல் மாநாட்டில் பங்கேற்க அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ஒவைசியை திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் நேற்று சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

பாஜக விமர்சனம்

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘‘பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒவைசியை பாஜகவின் ‘பி’ டீம் என்று திமுக கூட்டணி கட்சியினர் விமர்சித்தனர். இப்போது ஒவைசியை கூட்டணிக்கு திமுக அழைத்துள்ளது. இதனால் திமுகவை பாஜகவின் ‘பி’ டீம் என்று அழைப்பார்களா? திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விசிக வெளியேறுமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x