Published : 01 Jan 2021 07:45 AM
Last Updated : 01 Jan 2021 07:45 AM

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை சிக்கராயபுரத்தில் உள்ள குவாரியில் நிரப்புவது பற்றி தலைமைச் செயலர் ஆய்வு 

காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று கள ஆய்வு செய்தார். உடன் பல்வேறு துறை அதிகாரிகள்.

குன்றத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை சிக்கராயபுரம் கல் குவாரியில் நிரப்புவது தொடர்பாக தலைமைச் செயலர் க.சண்முகம் நேற்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை உபரி நீர் வெளியேறும் வாய்க்காலில் செக்டேம் அமைத்து மூடு கால்வாய் வழியாக தண்ணீரை திருப்பி மணப்பாக்கம் மற்றும் தந்தி கால்வாயில் தண்ணீரைக் கொண்டு சென்று சிக்கராயபுரம் கல் குவாரியில் தண்ணீரை நிரப்புவது குறித்து தலைமைச் செயலர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் தலைமைச் செயலர் க.சண்முகம் கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி, திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், பாதாள மூடு கால்வாய் அமைத்து, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளுக்கு எடுத்துசெல்லப்படும். சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டைகளை ஒருங்கிணைத்து, 1 டி.எம்.சி.தண்ணீரைத் தேக்கும் வகையில், நீர்தேக்கமாக மாற்றப்படும்.

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில், ஒவ்வொருமழையின்போதும் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்கும் வகையில், செம்பரம்பாக்கம் உபரி நீர் கால்வாய்– அடையாறு ஆறு இணையும் இடத்தில், 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அடையாறு ஆறு அகலப்படுத்தப்படும். அதேபோல், வடசென்னையிலும் வெள்ள பாதிப்பை தடுக்க, சிலதிட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாககோப்புகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த ஆய்வுவின்போது பொதுப்பணித் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிநீர் இணைப்பு கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.கே.சத்யகோபால், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட ஆட்சியர்கள் காஞ்சி மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு அ.ஜான் லூயிஸ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய செயல் இயக்குநர் டாக்டர்.டி.பிரபு சங்கர், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சென்னை மண்டலம் (நீர்வள ஆதாரத் துறை) அசோகன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x