Published : 05 Oct 2015 11:04 AM
Last Updated : 05 Oct 2015 11:04 AM

வழக்கறிஞர் என்.டி.வானமாமலை வாழ்க்கை குறித்த நூல் வெளியீடு: முன்னாள் தலைமை நீதிபதி பங்கேற்பு

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில், மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை வாழ்க்கை குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் இந்நூலை வெளியிட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர் நீதியரசர் கே.என்.பாஷா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

வழக்கறிஞர் என்.டி.வான மாமலை வாழ்க்கை குறித்த நூலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருணாச்சலம் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். இந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி கே.என்.பாஷா பேசியதாவது:

என்.டி.வி. என்று அழைக்கப்படும் என்.டி.வானமாமலை சிறந்த வழக்கறிஞர் என்பதை விட மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் என்று கூற வேண்டும். அவரிடம் முதன் முதலில் வாங்கிய காசோலைதான் நான் பெற்ற முதல் ஊதியம். அவர் ஒரு வழக்கை எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட மூல ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவார். நான் நீதிபதியாக அமர்ந்தபோதுதான் அவரிடம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் உதவியாக இருந்ததை உணர்ந்தேன். நான் அவரிடம் ஜூனியராக பணிபுரிந்தபோது அவரது குடும்பத்தினரும் எங்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பேசும்போது, “1941-ல் நாங்குநேரியில் சனாதன வைதீக குடும்பத்தில் பிறந்த அவர், சோவியத் புரட்சி தாக்கத்தால் புரட்சியாளராக மாறினார். சென்னைக்கு வேதியியல் படிக்க வந்தவர் பிறகு சிறந்த வழக்கறிஞரானார். ஏழை எளிய மக்களின் வழக்குகளை கட்டணமில்லாமல் நடத்தினார்” என்றார்.

நூலை வெளியிட்டு என்.டி.வானமாமலை குறித்து நீதியரசர் கற்பக விநாயகம் கூறும்போது, “நான் பல வழக்குகளில் அவரை எதிர்த்துத்தான் நீதிமன்றத்தில் தோன்றியிருக்கிறேன். எனினும் அவரைப் போன்ற ஒழுங்கும் நேர்மையும் கொண்டவரை காண முடியாது. நீதிபதி, அட்வகேட் ஜெனரல் போன்ற பதவிகள் தன்னைத் தேடி வந்தபோதும் அவற்றை வேண்டாம் என்று உதறியவர்” என்றார்.

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் பொதுச் செயலாளர் குட்டி பத்மினி, தமிழ் மாநிலச் செயலாளர் வி.வெங்கடகிருஷ்ணன், ரஷ்ய கலாச்சார மையத்தின் பொதுச் செயலாளர் பி.தங்கப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x