Last Updated : 18 Oct, 2015 02:10 PM

 

Published : 18 Oct 2015 02:10 PM
Last Updated : 18 Oct 2015 02:10 PM

திருப்பூரில் அதிகாரிகள் சோதனையால் வர்த்தகம் பாதிப்பு?

திருப்பூர் காதர்பேட்டையில் கடந்த வாரம் நடத்திய வணிக வரித்துறை தொடர் சோதனையால், உள்நாட்டு பனியன் வர்த்தகர்கள் பதற்றம் குறையாமலே உள்ளனர்.

காதர்பேட்டையில் மட்டுமல்ல, திருப்பூரில் உள்நாட்டு பனியன் வியாபாரம் நடக்கும் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கும் மேற்பட்ட கம்பெனிகள் பூட்டப்பட்டே காணப்படுகின்றன.

ஏன் இந்த நிலை? ஆர்.சி மற்றும் டின் எண் உள்ள நேர்மையான வர்த்தகர்கள் கூட அதிகாரிகள் சோதனையால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?

‘சிஸ்மா’ சங்க (செகன்ட்ஸ் காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறுதொழில் முனைவோர் சங்கம்) பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி கூறியதாவது:

திருப்பூரில் உள்நாட்டு தேவைக்கான உள்ளாடை உற்பத்தியில் 2000-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை வரியாக அரசுக்கு செலுத்துகிறோம். தொழிலில் 80 சதவீதம் பேர் முறையாக ஆர்.சி. வைத்துள்ளனர். மீதியுள்ளவர்கள் 4, 5 டேபிள்கள் மட்டும் போட்டு குடும்பம் குடும்பமாக கட்டிங், பண்டல் போடும் குடிசைத்தொழில் புரிபவர்களாகவே உள்ளனர்.

அவர்கள் சில சமயங்களில் தம் தயாரிப்பில் செகன்ட்ஸ் மிஞ்சும்போது, ஓரிரு பண்டல்களை ஈரோடு மற்றும் வெளிமாநில வியாபாரிகளுக்கு விற்பது உண்டு. அப்படி விற்கும்போது தான், பீஸ் எடுத்து வேலை செய்யும் கம்பெனியிடமே, பில் போட்டு அனுப்புவது வழக்கம். அப்படிப்பட்ட குடிசைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கம்பெனிக்குள்ளேயே நுழைந்து அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். இப்படி கம்பெனிக்குள் வந்து வணிகவரித்துறையினர் சோதனை நடத்துவது இப்போதுதான் புதுசு.

ஒவ்வொரு கம்பெனியிலும் கட்டிங் லாட், நூல்- துணி என்று இரண்டு பிரிவாக இருப்பு இருக்கும். கட்டிங் லாட்ல இருக்கிறது மட்டும் கணக்கில் ஏறியிருக்கும். நூல், துணி எல்லாம் கணக்கில் ஏற்ற 15 நாட்களாவது பிடிக்கும். அந்த கணக்கில் ஏற்றாத பிரிவை, கணக்கில் எடுத்துக் கொண்டு வரி கணக்கு போட்டு தொகையை செலுத்தச் சொல்கிறார்கள்.

‘ஆர்.சி.எண் பதிய வலியுறுத்தல்’

இதனால் தொழில்கூடங்களை பூட்டிவிட்டு பலர் சென்றுவிடுகிறார்கள். அடுத்து சரக்குகள் அனுப்பப்படும் லாரி அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது. அதில் 10 போலி ‘பில்’ சரக்கோடு அசலான 40 பில்களின் சரக்கும் இருக்கிறது. அவை ஒட்டுமொத்தமாகவே உரிய நேரத்தில் வட மாநிலங்களுக்கு சென்று சேர்வதில்லை. வெளிமாநில வியாபாரிகளும், இங்கே சோதனை நடைபெறும் தகவல் அறிந்து, வருவதில்லை. இதனால் தொழிலில் பதற்றம் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்தலாம். எச்சரிக்கை செய்யலாம். பிறகு நடவடிக்கை எடுக்கலாம். அதைவிட்டு பண்டிகை கால நேரத்தில் இப்படி செய்தால் என்ன ஆகும்? தற்போது வணிகவரித் துறை இணை ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், ‘எல்லோரும் ஆர்.சி. வாங்குங்க. சலுகை தர்றோம்ன்னு’ சொல்லியிருக்காங்க. ஆர்.சி. எண். பதிவு செய்யும்படி அனைவரிடமும் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நேர்மையானவர்களுக்கு பாதிப்பில்லை’

காதர்பேட்டை ‘செகன்ட்ஸ் பனியன் ஓனர்ஸ் அசோசியேசன்’ தலைவர் சுந்தரம் கூறியதாவது: உள்நாட்டு வர்த்தகத்தை பொறுத்தவரை மாநில அரசு 5 சதவீதம் வரி விதிக்கிறது. வெளிமாநில வர்த்தகம் என்றால் அதில் 1 சதவீதம் மட்டும் விதித்து மீதி 4 சதவீதத்தை திரும்பத் தருகிறது. இதைப் பெற, வாங்க வரும் வியாபாரிகளும், விற்கும் வியாபாரிகளும் ஆர்.சி. மற்றும் டின் எண் வைத்திருக்க வேண்டியது அவசியம். அது இல்லாமல் செய்வது மிகவும் தவறு என்பதை தொடர்ந்து நாங்கள் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளோம்.

கடந்த கூட்டத்தில் ஆர்.சி. எண் உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும் என்பதை அறிவித்தும் உள்ளோம்.

இப்போது நூற்றுக்கணக் கானவர்கள் ஆர்.சி. எடுப்பதில் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளனர். இதை இயக்கமாகவே நடத்துகிறோம். வணிகவரித்துறை இணை ஆணையர்,கடந்த 4 வருடமாக தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறார். அதையும் மீறி ஆர்சி எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது அதிகாரிகளை நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை. நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிகாரிகள் சோதனையால் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் சரக்குகள், லாரி ஆபீஸில் கூட தேங்குவதாக சொல்வது கூட, எங்களை நாங்களே நியாயப்படுத்திக் கொள்வதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் சொல்ல விரும்பாத சில வியாபாரிகள் கூறும்போது, ‘காதர்பேட்டையில் மட்டும் 2,565 கடைகள் உள்ளன. அதில் ஆர்.சி. வைத்துள்ளவர்கள் 300 பேர் மட்டுமே.

மற்றவர்கள் போலி பில் தயாரித்தே சரக்குகளை அனுப்பி வருகிறார்கள். இதில் வடஇந்தியர்கள் மட்டும் 80 சதவீதம் பேர். தினமும் 1000-க்கும் மேற்பட்ட வடநாட்டு வியாபாரிகள் சரக்குகள் வாங்க வந்து கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பான்மையோர் ஆர்.சி. இல்லாதவர்கள். எனவே சோதனைக்குப் பிறகு அவர்கள் வருகை 100 பேருக்கும் கீழாக குறைந்து விட்டது. இதனால் உள்ளூர் வர்த்தகம் மட்டும் இங்கு குறைந்தபட்சம் தினமும் ரூ.5 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x