Published : 10 Oct 2015 07:20 AM
Last Updated : 10 Oct 2015 07:20 AM

வாக்காளர்கள் பெயர் சேர்க்க 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை இம்மாதம் 24-ம் தேதி வரை அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முடிந்துள்ள இரண்டு முகாம்கள் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாறுதல் தொடர்பாக 14 லட்சத்து 45 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இறுதி மற்றும் 3ம் கட்ட முகாம் 11-ம் தேதி (நாளை) நடக்கிறது.

தாலுகா அலுவலகங்களில் நேரிலும், இணைய வழியிலும் விண்ணப்பங்கள் இம்மாதம் 14-ம் தேதி இறுதிநாளாக இருந்தது.

அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதால் இறுதிநாள் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான சேவைகளை பெற இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் ‘ஈசி- Electoral Assistnce SYstem’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதில், வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்து தவறுகளை திருத்தலாம். இத்திட்டப்படி, ஆண்ட்ராய்டு செயலி, தலைமை தேர்தல் அதிகாரியின் www.elections.tn.gov.in இணையதளம், 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் 044-66498949 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து சேவைகளை பெறலாம்.

இதன் மூலம், வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பத்தின் ஒவ்வொரு நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், வாக்குச்சாவடி அலுவலர் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்காளர் விவரங்களை சரிபார்க்கவும் புதிய வசதிகள் தமிழகத்தில் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, தேர்தல் துறையின் www.elections.tn.gov.in என்ற இணையதளம் எளிமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழில் விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் ஒரே தொகுதியி்ல் பல இடத்தில் இருப்பது, புகைப்படம் மாறியிருப்பது, புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பது குறித்த உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு, 32 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரித்து நடவடிக்கை

அவர்கள், வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வாக்காளரை நேரடியாக சந்தித்து, பட்டியலை சரிசெய்வார். பெயர் நீக்கம் குறி்த்து புகார்கள் வந்தால், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x