Last Updated : 27 Dec, 2020 04:37 PM

 

Published : 27 Dec 2020 04:37 PM
Last Updated : 27 Dec 2020 04:37 PM

சாலை விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூ.28 லட்சம் நிதி: 2013-ம் ஆண்டு தேர்வான காவலர்களின் ஏற்பாடு

சாலை விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்துக்கு, 2013-ம் ஆண்டு காவல் துறையில் தேர்வான சக காவலர்கள் தமிழகம் முழுவதும் ரூ.28 லட்சம் நிதி திரட்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று வழங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் மோசஸ் மோகன்ராஜ் (29). இவர் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது மணல் லாரி மோதி அதே இடத்தில் இறந்தார்.

இதனால் மோசஸ் மோகன்ராஜின் மனைவி இசபெல்லா, இரண்டரை வயதுப் பெண் குழந்தை மற்றும் பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் மோசஸ் மோகன்ராஜுடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 2013-ம் ஆண்டு காவல் துறையில் காவலர்களாகத் தேர்வானவர்களிடம் நிதியைத் திரட்டி பாதிக்கப்பட்ட மோசஸ் மோகன்ராஜ் குடும்பத்துக்கு வழங்குவது என முடிவு செய்தனர்.

மோசஸ் மோகன்ராஜ்

இதற்கிடையில் அதே ஆண்டில் காவலர்களாகத் தேர்வான தருமபுரி செந்தில்குமார் சாலை விபத்திலும், தூத்துக்குடி சத்தியலெட்சுமி மாரடைப்பாலும் இறந்ததால், அவர்களின் குடும்பத்துக்கும் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 2013-ம் ஆண்டு பேட்ச் காவலர்களிடம் நிதியாக ரூ.28 லட்சம் திரட்டப்பட்டது.

திரட்டப்பட்ட நிதியில் ஒரு பகுதியாக ரூ.8.15 லட்சத்தை இன்று தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் தெருவில் உள்ள மோசஸ் மோகன்ராஜ் மனைவியிடம், சக காவலர்கள் வழங்கி, அவரது ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதை போல் தூத்துக்குடி சத்தியலெட்சுமி மற்றும் தருமபுரி செந்தில்குமார் குடும்பத்துக்கும் இன்று 2013-ம் ஆண்டு தேர்வான காவலர்கள் திரட்டிய நிதியைப் பிரித்து வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x