Last Updated : 26 Dec, 2020 02:53 PM

 

Published : 26 Dec 2020 02:53 PM
Last Updated : 26 Dec 2020 02:53 PM

திருநள்ளாற்றில் கடைகள் அடைப்பு; பொதுமக்கள், பக்தர்கள் சாலை மறியல் - அலைக்கழிக்கப்பட்ட பக்தர்கள்

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சிக்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் கரோனா 'நெகட்டிவ்' சான்றுடன் வரவேண்டும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பக்தர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநள்ளாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளை (டிச. 27) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, முன்னதாகவும், சனிப்பெயர்ச்சி நாளுக்குப் பின்பு 48 நாட்களுக்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா பரவும் அபாயம் இருப்பதால் சனிப்பெயர்ச்சி விழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்குத் தடை விதிக்கக் கோரி கோயிலின் ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ்.நாதன் (எ) அமிர்தீஸ்வரநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன் அடிப்படையில், சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம், என்னென்ன அடிப்படைகளில் விழாவை நடத்த வேண்டும் என வழக்கில் தொடர்புடைய வாதி, பிரதிவாதிகள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டது.

அதனடிப்படையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் எஸ்.டி.சுந்தரேசன், வழக்குத் தொடுத்த எஸ்.பி.எஸ்.நாதன் (எ) அமிர்தீஸ்வரநாதன் ஆகிய 5 பேர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில், கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள் உள்ளிட்ட எவர் ஒருவருக்கும் கரோனா 'நெகட்டிவ்' சான்று கட்டாயம் என்பன உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இம்முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சனிப்பெயர்ச்சி விழாவின்போது பங்கேற்க சுமார் 17 ஆயிரம் பேர் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனர். குறுகிய நாட்களே இருப்பதால் அவர்களுக்கு இதுகுறித்த தகவல் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் ஏராளமானோர் இன்று (டிச. 26) திருநள்ளாறு கோயிலுக்கு வந்தனர். பெரும்பாலானோர் கரோனா சான்றுடன் வராததால் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒரு பகுதியினர், கரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். வெளியூர் நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட மாட்டாது என மறுக்கப்பட்டதால், பக்தர்கள் மருத்துவமனை அருகில் காலை 9 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவமனை அருகில் அமர்ந்திருந்தனர். ஆனாலும் மதியம் 1 மணி வரை எந்த முடிவும் சொல்லப்படாததால், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். ஆனாலும் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், "சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ளோம். கரோனா 'நெகட்டிவ்' சான்று அவசியம் என்பது இங்கு வரும் வரை எங்களுக்குத் தெரியாது. செல்போனுக்கு குறுந்தகவலும் வரவில்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்யவும் மறுக்கிறார்கள். கட்டண தரிசனத்துக்கு முன்பதிவு செய்த நிலையில், கட்டணைத்தைத் திரும்பப் பெறவும் வாய்ப்பில்லை எனச் சொல்கிறார்கள். கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை மனதுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. மிகவும் அலைக்கழிக்கப்பட்டுவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

இதனிடையே, கரோனா சான்று அவசியம் என்ற முடிவைக் கைவிடக் கோரி, திருநள்ளாற்றில் வியாபாரிகள், பொதுமக்கள், விடுதி உரிமையாளர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் ஏ.எம்.ஹெச்.நாஜிம், பி.ஆர்.சிவா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருநள்ளாற்றில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக, சனிப்பெயர்ச்சி நாளுக்கு முந்தைய வாரங்களிலிருந்தே கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படும். ஆனால், இன்று தர்பாரண்யேஸ்வரர் கோயில் வெறிச்சோடிக் காணப்பட்டது. வரிசை வளாகம் காலியாக இருந்தது. அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் சாலையில் நின்று கோபுரத்தை தரிசித்துச் சென்றனர்.

காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும், திருநள்ளாறு எல்லைப் பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவற்றில் திருநள்ளாறுக்கு வரக்கூடிய பக்தர்களிடம் கரோனா சான்று இல்லாவிட்டால் எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

திருநள்ளாறு பகுதியில் வசிக்கக்கூடியவர்கள் கூட வெளியில் சென்றுவிட்டு மீண்டும் திருநள்ளாறுக்குச் செல்ல சிரமப்பட்டதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x