Published : 26 Dec 2020 01:40 PM
Last Updated : 26 Dec 2020 01:40 PM

நல்லகண்ணுவின் 96-வது பிறந்த நாள்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணுவின் 96-வது பிறந்த நாளில் அவரை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தமிழகத்தில் வளர்த்தெடுத்த இரு முதுபெரும் தலைவர்கள் இடதுசாரிக் கட்சிகளில் 90 வயதைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

அந்த இரு தலைவர்களில் ஒருவரான சங்கரய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். மற்றொருவரான ஆர்.நல்லகண்ணு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். இருவரும் ஒன்றாக இடதுசாரி இயக்கத்தில் பயணித்தவர்கள். இன்றும் பயணித்து வருபவர்கள்.

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் அரசியல் பயணத்துக்கு 75 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உண்டு. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சி இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். இன்றும் அரசாங்கம் அளித்த வாடகை வீட்டில் எளிய முறையில் வாழ்க்கை நடத்திவருகிறார்.

அரசியலில் நேர்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக விளங்கும் ஆர்.நல்லகண்ணுவுக்கு இன்று 96-வது பிறந்த நாள். அரசியல் கட்சித் தலைவர்கள் நேரிலும், தொலைபேசி, ட்விட்டர் மூலமாகவும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத் திருவிழா, நல்லகண்ணுவின் பிறந்த நாள் விழா, சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், நல்லகண்ணுவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்; தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர். எளிமை-தியாகம்-நேர்மை இவற்றின் இலக்கணமாக அரசியல் கடலின் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டி வழிகாட்டும் பெருந்தோழர் நல்லகண்ணு பிறந்த நாளில் நேரில் சந்தித்து திமுக சார்பில் வாழ்த்தி மகிழ்ந்தேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x