Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன வேளாண் சட்டங்கள் குறித்து ராகுலுடன் விவாதிக்க தயார்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து

வேளாண் சட்டங்கள் குறித்து ராகுல் காந்தியுடன் பொதுவெளியில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான நேற்று நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி,பல்வேறு இடங்களில் திரண்டிருந்தவிவசாயிகளிடம் காணொலி மூலம்கலந்துரையாடினார்.

சென்னை அருகே மறைமலை நகரில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக பாஜக தலைவர்எல்.முருகன், மாநில பொதுச்செய லாளர்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோரின் உரைகள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது பேசிய பிரகாஷ் ஜவடேகர், ‘‘மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டுமே போராடி வருகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாகராகுல் காந்தியுடன் பொதுவெளியில் விவாதிக்க தயாராக இருக் கிறேன்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய பாஜக அரசுகடந்த 6 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. அதற்காகவே 3 புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதிகள், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகள் இந்த புதிய வேளாண் சட்டங்களில் அடங்கியுள்ளன.

ஆனால், பாஜக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய்பிரச்சாரம் செய்து வருகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலைஎப்போதும்போல தொடரும். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அரசு, மண்டிகள், தனியார்நிறுவனங்கள் என்று விருப்பம்போல விற்பனை செய்யலாம்.

இவற்றையெல்லாம் விவசாயிகளிடம் எடுத்துக் கூறி வருகிறோம். அதனால்தான் எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரத்தையும் மீறி பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல், ராஜஸ்தான், கோவா, காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் உள்ளாட்சித் தேர்தல், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது மோடி அரசின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்றாகும்.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதை மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x