Last Updated : 08 Oct, 2015 09:33 AM

 

Published : 08 Oct 2015 09:33 AM
Last Updated : 08 Oct 2015 09:33 AM

மக்கள் நல கூட்டியக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடிக்குமா?- மாநிலக் குழுவில் விவாதிக்க முடிவு

மக்கள் நல கூட்டியக்கத்தில் நீடிப்பது குறித்து 12-ம் தேதி நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகள் இணைந்து கடந்த ஜூலை 29-ம் தேதி மக்கள் நல கூட்டியக்கம் என்ற தனி அணியை உருவாக்கின. ஆனால் அந்த அணி உருவான சில வாரங்களுக்குள் தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் இந்த அணியிலிருந்து விலகியது. அத னைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியும் விலகியது.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மக்கள் நலக் கூட்டியக் கத்தில் உள்ள 4 கட்சிகளும் தேர்தலில் இணைந்து போட்டி யிடும்” என்று அறிவித்தார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “மக்கள் பிரச் சினைகளுக்காக போராடுவதற் காகவே மக்கள் நல கூட்டியக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் நல கூட்டியக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போதைய நிலையில் அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது சாத்தியம் அல்ல. எனவே, பெரும்பாலான நிர்வாகிகள் மக்கள் நல கூட்டியக்கத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை. வரும் 12-ம் தேதி சென்னையில் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் மக்கள் நல கூட்டணியில் இருந்துகொண்டு தேர்தலை சந்திப்பதா? இல்லையா? என்பது குறித்து விவாதம் நடைபெறும். அப்போது எங்களது கருத்துக்களை தெரிவிப்போம்” என்றார்.

ஏற்கெனவே 2 கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் இது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது மக்கள் நல கூட்டியக்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x