Last Updated : 24 Dec, 2020 02:41 PM

 

Published : 24 Dec 2020 02:41 PM
Last Updated : 24 Dec 2020 02:41 PM

அழகிரி தனிக் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு பாதிப்பில்லை: கனிமொழி எம்.பி

மு.க.அழகிரி தனியாகக் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு எந்த பாதிப்புமில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். திமுகவின் வெற்றி வாய்ப்பை எதுவும் பாதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், திமுக எம்.பி. கனிமொழி இன்று (வியாழக்கிழமை) காலை சிவசாசியில் அச்சுத் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கனிமொழி பேசியதாவது:

அரசின் மோசமான கொள்கை முடிவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். நாடு முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1 கோடி பேர் பட்டாசு தொழில் நலிவடைந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அரசாங்கமோ அதற்கு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. மத்திய அரசிடமும் பேசவில்லை. இதுவரை, திமுகவே பட்டாசு தொழிலாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வரும் நிலையில் இப்பிரச்சினையை இன்றைக்கு திமுக கையில் எடுக்கவில்லை.

சீனப் பட்டாசு இறக்குமதி குறித்து நானே நேரடியாக மத்திய அமைச்சரை சந்தித்துப் பேசினேன். அதுபோல் எங்களுடைய மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, பட்டாசு தொழிலாளர்களுக்காக அவையில் குரல் கொடுத்திருக்கிறார். எங்கள் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இது குறித்து பல கடிதங்களை எழுதியிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக இப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணப்படும்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாட்டிலேயே இங்குதான் வேலைவாய்ப்பினைம் அதிகமாக உள்ளது. புதிதாக தொழில் முதலீட்டுகளை ஈர்க்காத மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டும் முதல்வராக மட்டுமே இருக்கிறார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆகையால், மு.க.அழகிரி கட்சி தொடங்கினாலும் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் பறிக்க முடியாது. ஏனெனில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மிகச் சிறப்பானதாக பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். அதனை திமுக தலைவர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.

பலரின் வியூகம் திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்பதே. ஆனால், யார் கட்சி ஆரம்பித்து என்ன வியூகம் வகுத்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை சிதைக்க முடியாது. திமுகவின் வாக்கு வங்கிக்கு ரஜினி அல்ல அழகிரி அல்ல வேறு யாராலும் பாதிப்பு ஏற்படாது. பாமகவுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பது குறித்து தளபதி ஸ்டாலின் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x