Published : 23 Dec 2020 12:04 PM
Last Updated : 23 Dec 2020 12:04 PM

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு முறை: தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து திமுக வழக்கு

சென்னை

விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக சார்பில் ஆர்.பாரதி தொடர்ந்த வழக்கு ஜன.7-ம் தேதிக்கு மற்ற வழக்குகளுடன் சேர்ந்து விசாரிக்கப்பட உள்ளது.

தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பு படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அதனால் அந்த முறையை திரும்பப்பெற வேண்டும் என டிசம்பர் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.

அதேசமயம் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்கு என தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் திமுக மனு மீது தேர்தல் ஆணையம் உரிய முடிவெடுக்கவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதே விவகாரம் தொடர்பான வழக்கு ஜனவரி 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் ஜனவரி 7-க்கு தள்ளிவைக்க வேண்டும் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மற்றொரு வழக்கு டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் வந்து ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x