Published : 30 Oct 2015 07:54 PM
Last Updated : 30 Oct 2015 07:54 PM

சேலம் நகராட்சிக்கு வயது 150: வரலாறும் வளர்ச்சியும்!

முக்கனிகளில் முதல் கனியாம் மாம்பழத்திற்கு உலகப்புகழ் பெற்ற நகரம் சேலம். அதனால் தான் மாங்கனி நகரம் என்று பெயர் பெற்றது. அதுமட்டுமல்லாமல், வெள்ளி நகைகள், இரும்பு, அலுமினியம், சேகோ, கைத்தறி, சுண்ணாம்புக் கல், பாக்சைடு கனிமம், லாரி கட்டுமானம், இரும்புத் தொழிற் சாலை என எண்ணற்ற பெருமைகளோடு கலையுலக பதிவுகள், அரசியல் மாற்றங்களுக்கு அடித்தளமிட்ட நகரம் என்ற சிறப்பும் சேலத்திற்கு உண்டு. இந்த பசுமையான நினைவுகளை மீண்டும் நினைவில் கொள்ளத்தக்க வாய்ப்பு, சேலம் நகராட்சியின் 150 ஆண்டு கொண்டாட்டத்தில் சேலம் மக்களுக்கு கிடைத்துள்ளது.

பெயருக்கு பின்னால்...

சேலத்தின் கிழக்கே கொடுமலையும், மேற்கே கஞ்சமலையும், தெற்கே ஜருகுமலையும், வடக்கே நாகர்மலையும் சூழ்ந்து பசுஞ்சோலையாக இருந்துள்ளது. மலையும், மரமும், வற்றாத நீர் ஆதாரமும், வசிப்பதற்கு ஏற்ற தட்பவெப்பமும், இயற்கை மணம் நிறைந்து காணப்பட்டுள்ளது.கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையமாக இருந்துள்ளது.

கடந்த 5000 ஆண்டுகளுக்கு முன்பே சேலத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற வரலாறு மற்றும் தொல்லியல் துறையினரின் கூற்று அதன் தொன்மையை வெளிப்படுத்துகிறது. மலைகள் சூழ்ந்த பசுமையான பகுதியாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு அது பிற்காலங்களில் மருவி சேலம் ஆனது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கொடிகள் பறந்த பூமி

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடி பறந்த பூமி இது. தமிழ் மன்னர்களின் ஆட்சி மட்டுமின்றி பல்லவனும், சாளுக்கியனும், ஹொய்சனரும், ராஷ்டிர கூடரும், மொகலாயரும், நாயக்க மன்னர்களும் கூட சேலத்து மண்ணிலே தங்கள் கொடிகளை பறக்க விட்டுள்ளனர்.அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் எத்தனையோ போர்கள், ஆட்சி மாற்றங்கள், புரட்டிப் போட்ட இயற்கை சீற்றங்கள், கூண்டோடு அழித்த கொடிய நோய்கள், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த புரட்சிகள் என மன்னராட்சியில் தொடங்கி மக்களாட்சி வரை பல்வேறு வரலாற்று பதிவுகளை தன்னகத்தே கொண்ட சேலம், ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை மெருகுபடுத்திக் கொண்டே வந்துள்ளது.

உருவானது மாவட்டம்

பிரிட்டீஸ் கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792-ல் நடந்த போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் திப்பு சுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு, சேலம் மாவட்டம் 1792-ல் உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலேயே, மிகப்பெரிய முதல் மாவட்டமாக, ‘சேலம்’ உருவாக்கப்பட்டு, அதன் ஆட்சியராக கேப்டன் அலெக்சாண்டர் ரீடு பொறுப்பேற்ற நாள் 4.4.1792. அதன் பின், 1858-ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் ஆட்சி யின் கீழ் சேலம் இருந்துள்ளது. அதன்பின் 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நகராட்சி நிர்வாகம் தோன்றியது.

தலைவர்களின் பிறப்பிடம்

விஜயராகவாச்சாரியார், ராஜாஜி என எத்தனையோ தேச பக்தர்களை நாட்டுக்கு தந்துள்ளது சேலம். ஆங்கிலேயர் ஆட்சியில் தனது வாத திறமையால் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த விஜயராகவாச்சாரியாரை, ‘சேலம் வீரர்’ என்று போற்றிய இம்மக்கள் 1882-ல் சேலம் நகராட்சியின் உறுப்பினராகவும் தேர்வு செய்து பெருமைப்படுத்தினர்.

சேலம் நகராட்சி தலைவராக 1917-ல் பதவியேற்ற ராஜாஜி, பின்னாட்களில் சென்னை மாநில முதல்வர், மத்திய அமைச்சர், ஆளுநர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல், தமிழக முதல் அமைச்சர் என உயர்ந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் ராஜாஜி ஏற்படுத்திய அதிர்வுகளும், பதிவுகளுக்கு சேலம்தான் அடித்தளமிட்டது. திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் பல்வேறு காட்சிகள் அரங்கேறிய இடமாகவும் சேலம் இருந்துள்ளது. இப்படி பல்வேறு வரலாற்று விழுமியங்களை கொண்ட சேலம் நகராட்சி 1994-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது.

புதுப்பிக்கும் நேரம்

கடந்த கால வரலாற்றில் தனக்கு ஏற்பட்ட தடைக்கற்களையெல்லாம், படிக்கற்களாக மாற்றி உயர்ந்த சேலம் நகரம், இப்போது மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. சேலம் நகராட்சியின் 150 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னெடுக்கும் பல்வேறு தன்னார்வ சமூக தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் இதற்கான கோஷங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளன. இவர்களோடு கரம் கோர்த்து வரலாறுகளை புதுப்பிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

மக்கள்தொகைபெருக்கத்திற்கும், தொழில், விவசாய வளர்ச்சிக்கும் ஏற்ப ஏற்படுத்த வேண்டிய திட்டங்களை பட்டிய லிட்டு செயலாற்ற வேண்டிய நேரம் இது. மாங்கனி நகரம் மக்கள் மகிழ்ச்சியாய் வாழ் வதற்கு ஏற்ற நகரமாக மாறுவதற்கு, ஆட்சி யாளர்கள், அதிகாரிகள் மட்டுமின்றி சேலத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் இதய பூர்வமாக செயல்பட வேண்டியதே இப் போதைய தேவை. தற்போதைய கொண்டாட் டத்தினிடையே ஒவ்வொருவரும் மறக்காமல் எடுக்க வேண்டிய உறுதிமொழியும் கூட.

இருக்கு... ஆனா, இல்லை...

சேலத்தில் விமான நிலையம், டைடல் பார்க், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ராணுவ மருத்துவமனை, பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டன. இவற்றில் சில திட்டமிட்டதோடு முடங்கிப் போனது. மேலும் சில திட்டங்கள் தொடங்கிய வேகத்திலேயே நின்றுவிட்டன. அதையும் மீறி நடந்து முடிந்த சில திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன. மொத்தத்தில் இவற்றால் நமக்குத்தான் இழப்பு.

தொழில்துறையிலும், விவசாயத்திலும் ஏற்பட்டுள்ள தேக்கம் நகரின் ஒட்டு மொத்த வளர்ச்சியை கட்டுக்குள் வைத்து விட்டது. இப்போது, மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இடம்பெற்றுள்ள சேலம், இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி, கடந்த காலத்தை போல சொர்க்கபுரியாக மாற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

சேலத்தில் முதல்முதலாக மதுவிலக்கு

இப்போது தமிழகத்தின் முக்கிய கோஷமாக எழுந்துள்ள மதுவிலக்கு, சேலம் மாவட்டத்தில்தான் முதன் முதலில் அமலானது. சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி இருந்தபோது, சேலம் மாவட்டத்தில்தான் முதல்முதலாக மதுவிலக்கு சட்டத்தினை அமல்படுத்தினார்.

வலிமையான சேலம்

18-ம் நூற்றாண்டில் சேலத்தில் கிடைத்த இரும்பு கனிம வளத்தைக் கொண்டு நல்ல எஃகு தயாரித்தார் சேலத்தைச் சேர்ந்த அருணாச்சல ஆசாரி. இத்தகைய சேலம் இரும்பைக் கொண்டு ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டில் இரு பாலங்களைக் கட்டியுள்ளனர். அந்த பாலங்கள் இன்றும் ’சேலம் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது.

நன்றி மறவா பண்பு

சேலம் நகராட்சி சேர்மனாக ராஜாஜி பணியாற்றியபோது, திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் தொடர்ச்சியாய், காலரா மற்றும் பிளேக் நோய் பரவியது. பல நூறு பேரை பலி கொண்டது. அப்போது சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.டபிள்யூ.லீ மருத்துவ முகாம்களை நடத்தி பேரழிவின் பிடியில் இருந்து மக்களை காப்பாற்றி னார். ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டக்களத்தில் இருந்தாலும், ஆட்சியரின் சேவையை பாராட்டி நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றினார் ராஜாஜி. அவரது நினைவை இப்போதும் எதிரொலிக்கிறது சேலத்தின் மிகப்பெரிய வர்த்தக மையமான ‘லீ- பஜார்’

மேட்டூரில் இருந்து சேலத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம் 1952ல் செயல்படுத்தப்பட்டது. நகராட்சி சேர்மனாக ராஜாஜி இருந்தபோது தொடங்கிய திட்டம் இது, தாகம் தீர்க்கும் காவிரியை போற்றும் வகையில், ‘அன்னை காவிரி குடிநீர் திட்டம்’ என்று குறிப்பிட வேண்டுமென வலியுறுத்தி, அந்த பெயரிலேயே கல்வெட்டையும் உருவாக்கி காவிரித்தாய்க்கு மரியாதை செலுத்தினார்.

சேலத்து காந்தி

சேலத்து காந்தி என்று மக்களால் அழைக்கப்பட்டவர் எம்.ஜி.வாசுதேவய்யா. பழம்பெரும் தேசபக்தர். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு, தேச பக்த பணிகளில் ஈடுபட்டார். அரசு உத்தரவை மீறி கள்ளுக்கடை முன்பு எம்.ஜி.வாசுதேவய்யா போராட்டம் நடத்தியபோது குதிரைகளால் மிதித்து விரட்டப்பட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

முதல் கல்லூரி

கடந்த 1885-ம் ஆண்டு சேலத்தில் செகண்ட் கிரேடு கல்லூரி - பள்ளியின் நிர்வாகத்தை சேலம் நகராட்சி ஏற்றுக் கொண்டது. இந்தியா விலேயே நகராட்சி சார்பில் இயங்கிய முதல் கல்லூரி இது தான்.

அங்கவை... சங்கவை...

சேலம் உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோயில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலையும், கோயில் அருகே அவ்வையார் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. கொல்லிமலையை ஆண்ட பாரி மன்னனின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும், அவ்வையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைத்ததாக கூறுகின்றன வரலாற்றுப் பதிவுகள்.

சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள் ளது. திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம், திருமூலர் எழுதிய திருமந்திரம், அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் போன்றவற்றிலும் கரபுரநாதர் பற்றிய குறிப்புகள் உள்ளது.

கலை வளர்ந்ததும் இங்கேதான்!

திரையுலகின் பொற்காலத்தில் சேலத்திற்கு தனியிடம் உண்டு. 1935-ம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் தொடங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ், 9 மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. கதை வசனகர்த்தாவாக கருணாநிதியும், கதாநாயகனாக எம்ஜிஆரும், நடிப்புத் துறையில் ஜானகி எம்ஜிஆரும், கவியரசராக கண்ணதாசனும் முழு வடிவம் பெற்றது இங்குதான். சேலம் ரத்னா ஸ்டுடியோவில் சம்பூரண ராமாயணத்தில் நடித்த என்.டி.ராமாராவ் அதன்பின் அம்மாநில மக்களால் கடவுளாகவே போற்றப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x