Last Updated : 22 Dec, 2020 10:15 PM

 

Published : 22 Dec 2020 10:15 PM
Last Updated : 22 Dec 2020 10:15 PM

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைக் கருத்தில் கொள்வோம்: உமேஷ் சின்கா

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான விஷயத்தைக் கருத்தில் கொள்வோம் என்று இந்தியத் தேர்தல் ஆணையச் செயலாளர் உமேஷ் சின்கா தெரிவித்தார்.

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் வரும் 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று மாலை புதுச்சேரி வந்தனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில், தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ்குந்த்ரா, பிஹார் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மலேய் மாலிக் ஆகியோர் கொண்ட தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு புதுச்சேரியில் நாளை கூட்டங்களை நடத்துவதாக இருந்தது.

ஆனால், இன்று மாலை முதல் கூட்டங்களை நடத்தத் தொடங்கினர். முதலில் தேர்தல்துறை அதிகாரிகளைச் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகளைத் தனித்தனியாகச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, சிபிஐ, சிபிஎம், பாமக நிர்வாகிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அதில், "தேர்தல் பணியில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும், தேர்தல் அதிகாரிகளை மாற்ற வேண்டும், தமிழகத்தில் தேர்தல் நடத்தும் அதே நாளில் புதுச்சேரியிலும் நடத்த வேண்டும், ஆயிரம் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு முறையைப் பின்பற்றக் கூடாது. ஒரே இடத்தில் அதிக நாள் பணிபுரியும் போலீஸாரையும், அதிகாரிகளையும் மாற்ற வேண்டும்" உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆராய்ந்தோம். பிஹார் தலைமைத் தேர்தல் அதிகாரி தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். அரசியல் கட்சியினரைச் சந்தித்தோம். வாக்கு மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தக் கூறியுள்ளோம். வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யப்படும். பெயர் விடுபட்டோரைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பட்டியலில் இணைக்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் ஆயிரம் பேர்தான் இருக்கவேண்டும். அதற்கு மேல் இருந்தால் துணை வாக்குச்சாவடிகளாகப் பிரிக்கப்படும். அடிப்படை வசதிகள் செய்யப்படும். கரோனா தொற்றின் காரணமாகத் தேவையான ஏற்பாடுகளாக சானிடைசர், முகக்கவசம். உடல் வெப்பப் பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்படும்.

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குமுறையைப் பயன்படுத்துவது அவர்களின் விருப்பம்தான். கட்டாயமில்லை. வாக்காளர்களுக்குப் பரிசு, பணம் தருவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான விஷயத்தைக் கருத்தில் கொள்வோம். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்கு மொழி தடையாக இருக்காது. அவரது தேர்தல் பணியைச் சிறப்பாகச் செயல்படுகிறார்களா என்பதே முக்கியம்''.

இவ்வாறு உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x