Published : 22 Dec 2020 02:28 PM
Last Updated : 22 Dec 2020 02:28 PM

அரசு மருத்துவர்களின் நான்கு அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக: முதல்வர் பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் நீண்டகால நான்கு அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என, தமிழக முதல்வரைத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச.22) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா தொற்று உலகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கரோனா தடுப்புப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

கரோனாவைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல், துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதில் அரசு மருத்துவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறப்பாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், கரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றிய மருத்துவர்களின் நலனைத் தமிழக அரசு காப்பாற்றியதா என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தமிழக அரசு மருத்துவர்கள் அரசுக்கு நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, முதல் கோரிக்கை, மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி 12 ஆண்டுகளுக்கான தகுதிக்கு ஏற்ற ஊதியம், இரண்டாவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள், மூன்றாவது, மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடங்கள் மீண்டும் தரப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், நான்காவதாக, மருத்துவப் பட்ட மேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தமிழக முதல்வர் அறிவித்த, கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக மருத்துவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும் இதுவரை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அரசு மருத்துவர்கள் தங்களது பணியில் அயராது பணியாற்றி வருகிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வது நியாயமா?

இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழகம் இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், புதிய மருத்துவமனைகளையும் தொடங்குவதாலேயே நமது பெருமையை அடைந்துவிட முடியாது. அதற்குரிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

தமிழக மக்கள்தொகை 7 கோடிக்கு மேலே இருக்கிற நிலையில், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக இருப்பது குறித்து அதிமுக அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், மருத்துவக் கல்லூரிகளை அதிகமாகத் தொடங்கியிருக்கிறோம். மருத்துவப் படிப்புக்காக அதிக இடங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது?

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவர்கள்தான் மிகுந்த துணிவுடன் களப்பணி ஆற்றினார்களே தவிர, கரோனாவை எதிர்கொள்ளாமல் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்படியே சில மருத்துவமனைகள் செயல்பட்டாலும், நோயாளிகளால் தாங்க முடியாத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியதை எவரும் மறுக்க முடியாது. இதில் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது அரசு மருத்துவர்களே தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற மருத்துவர்கள் அல்ல.

கண்ணுக்கே தெரியாத கிருமியை, மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், ஆயுதமின்றிக் களமிறங்கும் போர் வீரனைப்போல, உயிரைப் பணயம் வைத்து பணி செய்தவர்கள் அரசு மருத்துவர்கள். கரோனா உச்சத்தில் இருந்தபோதும் கூட, பணியிலிருந்து ஒதுங்கவில்லை. இரவு-பகல் பாராமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய பெருமை அரசு மருத்துவர்களுக்கு உண்டு. அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகவே கரோனா தொற்றுப் பரவலையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் தமிழகத்தில் குறைக்க முடிந்தது. இத்தகைய சாதனைக்குச் சொந்தம் கொண்டாடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன?

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் 7 கோடி மக்கள்தொகைக்கு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 70 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இருப்பதோ 18 ஆயிரம் மருத்துவர்கள்தான். ஆனால், தமிழக முதல்வர் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பது குறித்தும், 2,000 மினி கிளினிக்குகள் தொடங்குவது குறித்தும் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் எந்தக் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்காதபோதும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையைப் புறக்கணிக்கிற நிலையில், இதுபோன்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது?

2,000 மினி கிளினிக்குகளுக்கு குறைந்தபட்சம் 3,000 மருத்துவர்களாவது நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்காக ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இங்கே அமர வைப்பதன் மூலம் மொத்த பொது சுகாதாரக் கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

எனவே, கரோனா தொற்று காரணமாக கடுமையான பாதிப்பிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களின் நீண்டகால நான்கு அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x