Last Updated : 21 Dec, 2020 06:16 PM

 

Published : 21 Dec 2020 06:16 PM
Last Updated : 21 Dec 2020 06:16 PM

நெருங்கும் புத்தாண்டு; காலண்டர் தயாரிப்பு தீவிரம்: 25% விற்பனை சரியும் என வியாபாரிகள் அச்சம்

புத்தாண்டு நெருங்கும் நிலையில், கோவையில் காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. நடப்பாண்டு 25 சதவீதம் வரை காலண்டர் விற்பனை சரியும் என வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நவீன உலகில் பேசுவதற்கு மட்டுமல்லாமல், நேரம், தேதி பார்க்க, தகவல்களைப் பெற, குறிப்புகளைச் சேமிக்க செல்போன் முக்கியப் பொருளாக, பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. செல்போன்களின் வருகையால், காலண்டர், டைரி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தேவை, சமீபகாலமாகக் குறைந்து வருகிறது.

இருப்பினும், புத்தாண்டில் வீடு மற்றும் நிறுவனங்களில் தேதி கிழிக்கும் வகையிலும், ஒரு மாதத்தை முழுதாகக் காட்டும் வகையிலும் காலண்டர்கள் பெயரளவுக்காவது ஒரு காலண்டரை மட்டும் வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர். ஏனெனில் டிஜிட்டல் காலண்டர்களை செல்போன்களில் பதிவிறக்கம் செய்தாலும், ஒவ்வொரு முறையும் ராசி பலன், நல்ல நேரம், முகூர்த்த நாட்கள், பண்டிகை தினங்கள் உள்ளிட்டவற்றைப் பார்க்கத் தினமும் செல்போனில் தேட முடியாது.

புத்தாண்டு தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வழக்கம்போல் காலண்டர் தயாரிப்புப் பணிகள் கோவையில் தீவிரமடைந்துள்ளன. ஆனால், காலண்டர் விற்பனை முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல், குறைவாகவே உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கோவையில் காலண்டர் தயாரிப்பை மொத்த தொழிலாகச் செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிடம் இருந்துதான் சில்லறை வியாபாரிகள், பொதுமக்களுக்கு காலண்டர்கள் செல்கின்றன.

காலண்டர் விற்பனை தொடர்பாக, கோவை நகர்மண்டபம், ஐந்து முக்கு பகுதியைச் சேர்ந்த காலண்டர் மொத்த தயாரிப்பு வியாபாரி கே.ரவி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ''வழக்கமாகத் தேதி கிழிக்கக்கூடிய அட்டை காலண்டர்கள் 10-க்கு 15, 10-க்கு 18, 12-க்கு 18, 14-க்கு 24, 20-க்கு 30 என்ற அளவுகளில் உள்ளன. இதில் 20-க்கு 30 அளவு மெகா சைஸ் காலண்டர் ஆகும். கடந்த ஆண்டு ரூ.22-க்கு விற்கப்பட்ட 10-க்கு 15 அளவுள்ள காலண்டர் நடப்பாண்டு ரூ.25-க்கும், கடந்த ஆண்டு ரூ.28-க்கு விற்கப்பட்ட வடிவங்களுடன் கூடிய 10-க்கு 18 அளவுள்ள காலண்டர் நடப்பாண்டு ரூ.30-க்கும் விற்கப்படுகிறது. 12-க்கு 18 அளவுள்ள காலண்டர் ரூ.35, 14-க்கு 24 அளவுள்ள காலண்டர் ரூ.100, 20-க்கு 30 அளவுள்ள காலண்டர் ரூ.250 (அட்டை மட்டும்) என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

இதுதவிர, வாகனங்களில் வைக்கக்கூடிய 2-க்கு 2 அளவுள்ள தேதி காலண்டர் ரூ.15, டேபிள் தேதி காலண்டர் ரூ.28, கோல்டு பிரேம் காலண்டர் குறைந்தபட்சம் ரூ.50 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், தேதி கிழிக்கும் வகையிலும், மாதாந்திரப் பக்கத்தையும் ஒருங்கிணைத்துள்ள டூ இன் ஒன் காலண்டரும் விற்பனைக்கு உள்ளது. மாதாந்திர காலண்டர்களில் மட்டும் 50 வகைகள் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.30 முதல் இவை விற்கப்படுகின்றன.

25 சதவீதம் விற்பனை சரியும்

நாங்கள் அட்டைகளை மொத்தமாக வாங்கி, சிவகாசிக்கு அனுப்பி, அங்கே வேண்டிய அளவுகளில் கட்டிங் செய்து, அதில் கடவுள், தலைவர்கள், குழந்தைகள், இயற்கைக் காட்சிகளின் படங்களை ஒட்டிக் கோவைக்குக் கொண்டு வருகிறோம். பின்னர், இங்கு வைத்து தேதி புக்கை அட்டையுடன் இணைத்து, வாடிக்கையாளர்கள் கூறும் முகவரியை அட்டையில் அச்சிட்டு விற்பனை செய்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களின் படங்களை அச்சிட்டு அரசியல் கட்சியினர் அதிக அளவில் வாங்கிச் செல்வர்.

தவிர, தொழில்துறையினர், வர்த்தக அமைப்பினரும் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் அட்டை காலண்டர்களை அச்சிட்டுப் பெற்றுச் செல்கின்றனர். வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தேதியில் வியாபாரம் களை கட்டியிருக்கும். ஆனால், கரோனா தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி, பணப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நடப்பாண்டு வியாபாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் காலண்டர்கள் விற்கப்படும். தற்போது வரை 20 ஆயிரம் காலண்டர்களே விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு 25 சதவீதம் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பொங்கல் வரை காலண்டரின் தேவை இருப்பதால், விற்பனை ஓரளவுக்கு லாபகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பொதுமக்களிடம் இருந்து விசாரிப்புகள் இருந்தாலும், மழையின் காரணமாக அட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலண்டர் தயாரிப்பும் சற்று குறைந்துள்ளது. இதுவும் காலண்டர் வியாபாரம் குறைய ஒரு காரணம்'' என்று ரவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x