Published : 21 Dec 2020 12:55 PM
Last Updated : 21 Dec 2020 12:55 PM

தமிழக அரசின் ரூ.2500 பொங்கல் பரிசு அறிவிப்பை நான் விமர்சித்தேனா?- பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்

கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை. | படம் உதவி: ட்விட்டர் பக்கம்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்குவதாக வெளியிட்ட தமிழக அரசின் அறிவிப்பை மோசமாக விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கமும் அளித்துள்ளார்.

முன்னதாக, பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஜனவரி 4-ம் தேதி முதல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றும் எதிர்த்தும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, முதல்வரின் அறிவிப்பை மோசமாக விமர்சித்ததாகத் தகவல்கள் வெளியாகின. கோயம்புத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதைச் சுட்டிக்காட்டி இந்த வாதம் முன்வைக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தோழமைக் கட்சியை பாஜக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது. அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதைத் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களைக் குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க வளர்க தமிழ்நாடு.

பொங்கலுக்குக் கொடுக்கும் தொகையை ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக முதல்வர் உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்தப் பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும்" என்று விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆளுங்கட்சி அறிவிப்பை தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x