Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM

நாடு முழுவதும் கடந்த 2019-ல் நடந்த சாலை விபத்துகளில் 25,858 பாதசாரிகள் உயிரிழப்பு: முந்தைய ஆண்டைவிட 14 சதவீதம் அதிகம்; கட்டமைப்பு இல்லாதது, விதிமீறல்கள் காரணம்

சாலை விதிகளை பின்பற்றாதது, சாலைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நாடு முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு 25,858 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 14 சதவீதம் அதிகம்.

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய வகை வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்,சாலை விதிகளை மதிப்பதிலும், வாகனங்களை சீராக இயக்குவதிலும் முழு கவனம் செலுத்துவது இல்லை. இதனால், விபத்துகள் நடக்கின்றன. வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, உடன் பயணிப்பவர்கள், சக வாகன ஓட்டிகள், சாலையோரம் நடந்து செல்லும் அப்பாவி பாதசாரிகளும் விபத்துகளில் சிக்குகின்றனர். சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடந்தாலும், பல்வேறு இடங்களில் பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்பது பரவலான புகாராக உள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு வகையான சாலை விபத்துகளில் பாதசாரிகள் 25,858 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 2,933, மகாராஷ்டிராவில் 2,849, கர்நாடகாவில் 1,880 பேர் இறந்துள்ளனர். இதில் 12-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,044 பாதசாரிகள் இறந்துள்ளனர்.

சாலைகளில் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததது மற்றும் பாதசாரிகளின் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணம். முந்தைய ஆண்டைவிட உயிரிழப்பு 14 சதவீதம் அதிகம் என்றுமத்திய போக்குவரத்து அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

புதிய சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல் போன்ற பணிகள்நடக்கிறதே தவிர, சாலைகளில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது இல்லை. பெரும்பாலான இடங்களில் நடைபாதைகள் இருப்பது இல்லை. ஒருசில இடங்களில் இருக்கும் நடைபாதைகளும் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டுள்ளன. சில இடங்கள் வாகன நிறுத்தமாக மாறியுள்ளன. இது அவர்களது உயிருக்கு ஆபத்தாகிறது.

இதுகுறித்து சென்னை ஐஐடிபேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நம் நாட்டில் சாலைகள் அமைப்பது என்றாலே வாகனங்களுக்குதான் என்ற எண்ணம் உள்ளது. பாதசாரிகளுக்கான கட்டமைப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படுவது இல்லை. மத்திய அரசின் இந்தியன் ரோடுகாங்கிரஸ் (ஐஆர்சி) விதிகளின்படி, சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள சாலைகளில் 500 மீட்டருக்குஒருமுறை பாதசாரிகள் கடந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும். அல்லது, அந்த இடத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், இங்கு ஒருசில இடங்களில் சுமார் 2 கி.மீ. தூரம் வரைகூட மக்கள் கடந்து செல்ல பாதைகள் இல்லை. தவிர, வாகனங்களும் வேகமாக செல்கின்றன. இந்த சூழ்நிலையில், மக்கள் சாலைகளை கடந்து செல்ல முயற்சிக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பு நேரிடுகிறது. எனவே, சாலைகள் அமைப்பது, விரிவாக்கம் போன்ற பணி மேற்கொள்ளும்போதே பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதும் அவசியம்’’ என்றார்.

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட்சிவில் ஆக்‌ஷன் குரூப் (சிஏஜி) அமைப்பின் மூத்த ஆய்வாளர் என்.சுமணா கூறும்போது, ‘‘வளர்ந்தநாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வாகனங்களை குறைத்து சைக்கிள் பயணம், நடைபாதைகள் அமைப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் நாட்டில் சாலைகளில் பாதசாரிகளுக்கான கட்டமைப்பு பணிகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படுவது இல்லை. ஒரு சாலை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் முன்பு, அப்பகுதி மக்களை அழைத்து அவர்களது தேவை குறித்து ஆலோசித்து, அதன்பிறகு திட்டங்களை நிறைவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும். சாலைகளை பயன்படுத்துவதில் பாதசாரிகளின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் பாதைகள் நன்றாக இருந்தால், குறுகிய தூரம் செல்பவர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவார்கள். இதன்மூலம் வாகன பயன்பாடு குறையும். பாதசாரிகளை பாதிக்கும் வகையில் விபத்து ஏற்படுத்துவோருக்கு கூடுதல் அபராதம், தண்டனை அளிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x