Published : 18 Dec 2020 02:33 PM
Last Updated : 18 Dec 2020 02:33 PM

ரூ.16 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய விவசாய சந்தை; கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க அனுமதிக்க மாட்டோம்: சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

இந்த நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட பொழுது போராடிய அவர்களை தீவிரவாதிகள் என்றான், அதே போன்ற கொள்ளைக்காரர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு போராடுகிற நம்மைப் பார்த்து தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்கிறார்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் எம்.பி. சு வெங்கடேசன் பேசினார்.

திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசியதாவது:

“இந்த சட்டம் உழவர்களுக்கு எதிரான சட்டம், மாநில சுயாட்சிக்கு எதிரான சட்டம், 130 கோடி இந்திய மக்களின் உணவு உரிமைக்கு எதிரான சட்டம். அதனால்தான் இந்த சட்டத்தின் மீது விவாதம் நடந்த பொழுது பதில் வழங்கவேண்டிய மத்திய வேளாண்துறை அமைச்சர் , மானமுள்ள ஒரு அமைச்சர் மறுநிமிடமே ராஜினாமா செய்து வெளியேறினார். மானமிழந்தவர்கள் இந்த நிமிடம் வரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

மூன்று மணி நேரம் இந்த சட்டத்திற்கு நாடாளுமன்ற மக்களவையில் வாதத்திற்கு ஒதுக்கினார்கள். அதில் இரண்டு மணிநேரம் ஆளும் கட்சியும் , ஆளுங்கட்சியின் ஆதரவு கட்சிகளும் சட்டத்தை ஆதரித்து பேசினார்கள். எதிர்க்கட்சிகள் ஆகிய எங்களுக்கு ஒரு மணி நேரம் கூட கொடுக்கவில்லை. இந்த சட்டம் எப்படி 130 கோடி மக்களுக்கு எதிரானது என்பதை பேசுவதற்கு ஒரு மணி நேரம் கூட மோடி அமித்ஷா அரசு எங்களுக்கு வழங்கவில்லை.

ஆனால் இந்த அரசை 20 மணிநேரம் பேச்சுவார்த்தையில் உட்கார வைத்த பெருமை இந்தியாவின் விவசாயிகளுக்கும், இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சாரும்.

உள்துறை அமைச்சர் அறிவித்தார் போராடும் விவசாயிகள் புராரி மைதானத்தில் வந்து உட்காருங்கள் அதன்பிறகு நாங்கள் பேசுகிறோம் என்றார். எங்கே உட்கார வேண்டும்? என்ன பேசவேண்டும்? என்பதை போராடுகிற இயக்கங்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் முடிவு செய்யக்கூடாது என்பதை உணர்த்தி இருக்கிறார்கள் விவசாயிகள்.

அது மட்டுமல்ல தமிழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து 15 நிமிடம் கூட கொடுக்கவில்லை. ஆனால் இன்று தமிழகமே பற்றி எரியக் கூடிய ஒரு காட்சியை விவசாயிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, மாநில சுயாட்சியின் பிரச்சனை. சுயமரியாதை உள்ளவர்கள் போராடுகிறார்கள், சுயமரியாதை என்றால் என்ன விலை ? எனக் கேட்பவர்கள்இன்று ஆட்சியில் உட்கார்ந்து முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

அது மட்டுமல்ல இங்கே தலைவர்களெல்லாம் குறிப்பிட்டார்கள் திமுகவின் தலைவரை பார்த்து தமிழகத்தின் முதல்வர் இடைத்தரகர் என்று குறிப்பிடுகிறார். யார் இடைத்தரகர்கள் ?கரோனாவால் இந்த நாடே திணறிக் கொண்டிருந்த பொழுது இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். மக்களவையில் இந்த சட்டம் நிறைவேறிய பொழுது நள்ளிரவு 12 மணி.

மாநிலங்களவையில் இந்த சட்டத்தை ஓட்டெடுப்பை நடத்தாமல் ஓட்டெடுப்பு நடத்தியதாக அறிவித்தீர்கள். ஜனாதிபதி கையெழுத்திட்டது ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி.‌ பெருந்தொற்றுகாலத்தில் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை கையெழுத்துப் போட்டு சட்டத்தை நிறைவேற்றிய நீங்கள் இடைத்தரகர்களா? நாங்கள் இடைத்தரகர்களா?

இந்தியாவில் மோடியும், எடப்பாடியும் இருக்கும் வரை இன்னொரு இடைத்தரகர் உருவாகவே முடியாது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். என்ன கேவலம். நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள், இந்த நாட்டினுடைய விவசாயிகளின் எழுச்சி, என்ன உருவாகியிருக்கிறது என்று தெரியுமா ?

இந்த மூன்று சட்டங்களும் 18 பக்கம் ஆனால் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு இந்த சட்டத்தில் நாங்கள் என்னவெல்லாம் திருத்தம் செய்கிறோம் மாற்றம் செய்கிறோம் என்று அனுப்பியிருக்கிற கடிதம் 19 பக்கம். 18 பக்கம் சட்ட திருத்தம் செய்த உன்னையே 19 பக்கம் கடிதம் எழுத வைத்த பெருமை இந்த நாட்டினுடைய விவசாயிகளுக்கும் , அரசியல் இயக்கங்களுக்கும் உண்டு.

போராடுபவர்களை பார்த்து அவர்கள் சொல்லுகிறார்கள்‌ போராடுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள், போராடுபவர்கள் பாகிஸ்தான், சீனா ஏஜென்ட்கள், இன்னும் சொல்லப்போனால் போராடுகிறவர்கள் நக்சலைட்டுகள் எனச் சொல்கிறார்கள்.

இந்த நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட பொழுது போராடிய அவர்களை தீவிரவாதிகள் என்றான், அதே போன்ற கொள்ளைக்காரர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு போராடுகிற நம்மைப் பார்த்து தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்கிறார்கள். நாங்கள் தேசபக்தர்கள், இந்த தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே தெரிந்துகொள்ளுங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட டெல்லியின் டிசம்பர் மாத கடுங்குளிரில்‌‌ (இன்றைக்கு 8 டிகிரி குளிர் அடித்துக் கொண்டிருக்கிறது) கூட வீடற்ற வழியில் 5 லட்சம் மக்கள் போராட்டத்தை நடத்தியது கிடையாது. அதைவிட ஒரு பேயாட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது, உழவர்களுக்கு எதிராக; மாநில உரிமைகளுக்கு எதிராக; 130 கோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நமது இந்தியாவின் விவசாய சந்தையின் மதிப்பு ஒரு வருடத்திற்கு 16 லட்சம் கோடி. அதை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுத்து பல லட்சம் கோடியை கொள்ளை அடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த துடிப்புக்கு எதிராக மக்களுடைய பேரெழுச்சி இந்த சட்டங்களை பின் வாங்க வைக்கும். அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு உச்சநீதிமன்றம் போராட்டத்திற்கு செவிமடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்து இந்தியாவின் டெல்லியில் சிங்கு எல்லையில் மட்டும் 18 கிலோ மீட்டருக்கு விவசாயிகள் டென்ட் அடித்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே அங்கே துவங்கி இங்கே வரை கனடாவில் துவங்கி வள்ளுவர் கோட்டம் வரை உலகம் முழுவதும் இன்று சட்டத்திற்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலே சிறந்த முறையில் தமிழகம் அளித்த பங்களிப்பு நாம் செய்துகொண்டிருப்பது.

மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் சொல்கிறேன்; நாடாளுமன்றத்தில் பஞ்சாப்பிற்கு அடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக கர்ஜித்த முழக்கம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழக்கம். எங்கள் தமிழகத்தின் தலைவர்கள் காட்டிய வழியிலே நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 12:30 மணிவரை இருந்து, இந்த சட்டத்திற்கு எதிராக போர் முழக்கத்தை பதிவு செய்தோம்.

விவசாயிகளின் உரிமையை ,எங்கள் மாநிலத்தின் உரிமையை, 130 கோடி மக்களின் உரிமையை போதும் தாழவிட மாட்டோம் என்பதற்கு மீண்டும் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டும் வழிகாட்டும் என்பதை சொல்லி முடிக்கிறேன்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x