Published : 17 Dec 2020 01:10 PM
Last Updated : 17 Dec 2020 01:10 PM

டார்ச் லைட் சின்னம் வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் முறையீடு 

தங்கள் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தையே 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரிக்கு ஒதுக்கியதுபோல், தமிழகத்துக்கும் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ரஜினிகாந்த் டிச.31-;ல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். திமுக பிரச்சாரப் பயணத்தை நவம்பர் மாதமே தொடங்கிவிட்டது.

அதிமுக பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது. மற்ற கட்சிகளும் அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது கட்சிக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் பேசினார்.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கான சின்னத்தை ஒதுக்குவதில் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களுக்கு அதே சின்னத்தை ஒதுக்கக் கோரியிருந்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கடந்த 14-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு இல்லை என்று தெரிவித்தது.

டார்ச் லைட் சின்னத்தை விஸ்வநாதன் என்பவர் நடத்தி வரும் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுகவுக்கு இடையில் பரிசுப்பெட்டிச் சின்னம் ஒதுக்கப்பட்டாலும், இம்முறை அவர்கள் கேட்ட குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.

சீமானின் நாம் தமிழர் கட்சிக்குக் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இப்போது நடைபெறும் தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் ஒதுக்காததற்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். 'சீரமைப்போம் தமிழகத்தை' பிரச்சாரப் பயணக் கூட்டத்தில் பேசிய அவர், “நமக்கு டார்ச்லைட் சின்னம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது. டார்ச்லைட் சின்னம் இல்லை என்றால் கலங்கரை விளக்கத்தை நாங்கள் வாங்குவோம். சாதாரண ரூபத்தை விஸ்வரூபமாக மாற்றுவது இவர்கள்தான். நீங்கள் சொல்லுங்கள், எப்பொழுது விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று. உடனடியாக எடுத்து விடுவோம்” என்று கமல் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ஆணையம் முறையீட்டை ஏற்றாலும் டார்ச் லைட் சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும், புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அதை வைத்து தமிழகத்திலும் ஒதுக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x