

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று 3-வது நாளாக விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மற்றும் மின்சார சட்டத் திருத்தம் 2020-ஐ கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை 3 நாட்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதன்படி, முதல் நாளான 14-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் 150 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து, 2-வது நாளாக 15-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது என்று காவல் துறையினர் தடை விதித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 3-வது நாளான இன்று (டிச. 16) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சூரியன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் அதிகாரம், சிஐடியூ, ஏஐடியூசி, தொமுச, மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்டவற்றை சேர்ந்த 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.