Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

ரூ.110 கோடிக்கு வெளிநாட்டில் சொத்து; ரூ.700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்த நிறுவனம்: வருமானவரித் துறை சோதனையில் அம்பலம்

சென்னை

இந்தியா முழுவதும் பிரபல நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரித் துறையினரின் சோதனையில் ரூ.700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சிமென்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு குழுமம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இக்குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 60 இடங்களில் இந்த சோதனை நடந்தன.

சோதனையின் முடிவில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றைஆய்வு செய்ததில் பல முறைகேடுகள் தெரிய வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நாடு முழுவதும் அந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த குழும இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.23 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் ரூ.110கோடி அளவுக்கு டெபாசிட் செய்துள்ளனர். அதற்கான முறையான அனுமதி பெறப்படவில்லை.

அந்த குழுமத்தின் கீழுள்ள மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நன்கொடை பெற்றதைக் குறிக்கும் வகையிலான சில ரசீதுகளும் சிக்கியுள்ளன. மேலும், போலியாக ஆவணங்கள் சமர்பித்து ரூ.435 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து ஆய்வுசெய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

இதேபோல் ஈரோட்டில் பதி அசோசியேட்ஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ஏராளமான ஆவணங்களும், கணக்கில் வராத பலகோடி ரூபாய் பணமும் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x