Last Updated : 16 Dec, 2020 03:15 AM

 

Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியினர் ஆயத்தம்; புதுச்சேரி காங்கிரஸ் - திமுகவில் அதிகரிக்கிறது விரிசல்: அதிருப்தியாளர்களை குறி வைக்கிறது பாஜக

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், கூட்டணிக் கட்சியான திமுகவுக்கும் இடையில் விரிசல் அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி ஆளும் கட்சி அதிருப்தியாளர்களை பாஜக குறிவைக்க தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. தொடக்கத்தில் காங்கிரஸ் - திமுக உறவு சீராக இருந்தாலும் நாளாக, நாளாக விரிசல் விழத் தொடங்கியது.

குறிப்பாக திமுகவுக்கு அமைச்சர் பதவியோ, நியமன எம்எல்ஏ பதவியோ தராதது விரிசலை அதிகப்படுத்தியது. அரசு செயல்பாட்டை நேரடியாக திமுகவினர் விமர்சிக்கத் தொடங்கினர். புதுவை மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ (தெற்கு), சிவக்குமார் (வடக்கு), நாஜிம் (காரைக்கால்) ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வந்ததால் காங்கிரஸுக்கு பிரச்சினை ஏதும் எழவில்லை.

தேவையெனில், சென்னை சென்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து திமுகவுக்கு நெருக்கமாக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி காண்பித்து வந்தார்.

மீண்டும் சந்திப்பு

புதுச்சேரியில் திமுகவுடன் தொடர் விரிசல் அதிகரிப்பால் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் நாராயணசாமி கடந்த சனிக்கிழமையன்று சென்று சந்தித்தார். அதில், புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர கோரிக்கையும், ஆட்சியில் திமுக பங்கேற்பது தொடர்பாகவும் பேசித் திரும்பினார்.

இந்தத் தகவல் அறிந்து அன்றிரவே புதுச்சேரி திமுக நிர்வாகிகள் மூவரும் நேரடியாக சென்னை சென்று, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து புதுச்சேரி நிலவரங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.

இதனால், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் மேலும் வலுத்துள்ளது.

இணைந்த கைகள்

தற்போது திமுக மாநில அமைப்பாளர்கள் மூவரும் இணைந்து செயல்படத் தொடங்கியதுடன், கட்சித் தலைமைக்கும் நேரடியாக புதுச்சேரியின் அரசியல் நிலைமையை விளக்கியுள்ளனர். குறிப்பாக மூவரும் இணைந்து திமுக எம்பி ஜெகத்ரட்சகனிடம் நிலையை விளக்கி, திமுக தலைவர் ஸ்டாலினையும் இரு முறை சந்தித்துள்ளனர். இதையடுத்து கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் ஆளும் காங்கிரஸை புதுவை திமுக நிர்வாகிகள் நேரடியாக விமர்சிக்கத் தொடங்கினர்.

திமுகவைத் தொடர்ந்து கூட்டணியில் தக்கவைக்க முதல்வர் நாராயணசாமி முயற்சி எடுக்கத் தொடங்கினார். கருணாநிதி பெயரில் ‘காலை சிற்றுண்டி திட்டம்’, சாலைக்கு கருணாநிதி பெயர், சிலை திறப்பு என அவர் எடுத்து வரும் செயல்பாடு புதுவை திமுகவினரை சமாதானப்படுத்தவில்லை.

‘புயலின் போது அமைச்சர்கள் களப்பணிக்கே வரவில்லை!’ என்று நேரடியாக திமுக தாக்கியது. திமுக விமர்சனத்துக்கு காங்கிரஸ் தரப்பு இதுவரை மவுனமாகவே உள்ளது. "இக்கூட்டணி தொடருமா அல்லது கூட்டணியில் இடம் பெற்று கூடுதல் இடங்களை புதுச்சேரியில் திமுகவினர் பெறுவார்களா என்பது விரைவில் தெரிய வரும்" என்று திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி மீதும், அமைச்சரவை மீதும் அக்கட்சி நிர்வாகிகளும், சில எம்எல்ஏக்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு பதவி பறிக்கப்பட்டுள்ளது. பல அமைச்சர்கள் செயல்பாடும் ஆட்சியில் திருப்திகரமாக இல்லை என காங்கிரஸ் எம்எல்ஏக்களே ஆட்சியை விமர்சித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

வலை வீசும் பாஜக

இச்சூழலில் அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜகவும் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, "காங்கிரஸில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடங்கி பலரிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அதில் அமைச்சர்களும் அடங்குவார்கள். " என்கிறார்கள்.

முதல்வர் நாராயணசாமிக்கு மிக நெருக்கமானவராக வலம் வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தொடங்கி பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அணி மாறுவார்கள் என்று கூறப்படுகிறது.

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்குள் இருந்த விரிசல் வெளிப்படையாகி, அதில் அதிருப்தியாளர்களின் பலரின் முகமும் தெரிய தொடங்கியுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி சரி செய்து வரும் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி ஒருபுறமும், இதை பாஜக குறிவைத்து தங்கள் பக்கம் அதிருப்தியாளர்களை இணைக்குமா என்ற கேள்வி மறுபுறமும் எழுந்துள்ளது. இதற்கு விடை, “வரும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரிய வரும்’‘ என்கிறார்கள் புதுவை அரசியல் பிரமுகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x