Last Updated : 13 Dec, 2020 12:09 PM

 

Published : 13 Dec 2020 12:09 PM
Last Updated : 13 Dec 2020 12:09 PM

காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிப்பது எப்போது? - தகுதி இருந்தும் அரசியல் அழுத்தம் இன்றி தாமதம்

காரைக்குடி நகராட்சி அலுவலகம்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்கப் போதிய தகுதி இருந்தும், அரசியல் அழுத்தம் இல்லாததால் தாமதமாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. சிவகங்கை மாவட் டமாக பிரிந்த பின் 1988-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013 -ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 13.75 ச.கி.மீ. பரப்பு கொண்டது.

153 கி.மீ. சாலைகள் உள்ளன. தற் போது நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.25 கோடிக்கு மேல் உள்ளது. அழ கப்பா பல்கலைக்கழகம், மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (சிக்ரி), அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம், பிஎஸ்என்எல் மண்டல அலுவலகம், ஆவின் மண்டல அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன. காரைக் குடியில் செட்டிநாடு பாரம்பரிய வீடுகளை பார்வையிட வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் அதிகளவில் வருகின்றனர். இந்நகருக்கு அருகே குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, அரியக்குடி பெருமாள் கோயில் என ஆன்மிகத்தலங்கள் உள்ளன.

இதனால் காரைக்குடிக்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த நகராட்சியையொட்டி சங்கரா புரம், கோவிலூர் ஊராட்சிகள், கோட் டையூர் பேரூராட்சி நகரின் விரிவாக்கப் பகுதிகளாக உள்ளன. இதையடுத்து காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த 2015 மே மாதம் அப்போதைய நகராட்சித் தலைவர் கற்பகம்இளங்கோ தலைமையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காரைக்குடி நகராட்சியுடன் கோட்டையூர் பேரூராட்சி மற்றும் சங்கராபுரம், கோவிலூர், அரியக்குடி, இலுப்பக்குடி, அமராவதி புதூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்குடி நகராட்சி-1.06 லட்சம் பேர், கோட்டையூர் பேரூராட்சி-14,766, சங்கராபுரம்-13,793, கோவிலூர்-5,203, இலுப்பக்குடி 3,989, அரியக்குடி-3,660, அமராவதி புதூர்-9221 பேர் என, 1.57 லட்சம் பேர் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இப்பகுதிகளை காரைக்குடியுடன் இணைத்தால் மக்கள்தொகை 3 லட்சத்துக்கு மேல் இருக்கும். மேலும் பரப்பும் 83.44 சதுர கி.மீ. ஆக விரிவடையும்.

ஆண்டு வருவாயும் ரூ.30 கோடியாக உயரும். ஆனால் அரசியல் அழுத்தம் இன்றி காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தும் திட்டம் தாமதமாவதாகப் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில் கடந்த டிச. 4-ம் தேதி சிவகங்கை வந்த தமிழக முதல்வர் கே.பழனிசாமி, போதிய மக்கள்தொகை இருந்தால் காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து வருவாய், மக்கள் தொகை விவரங்களை முதல்வரிடம் தெரிவித்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்த அமைச்சர் ஜி.பாஸ்கரன், முன் னாள் எம்பி செந்தில்நாதன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதி.ஜெகநாதன் கூறியதாவது: காரைக்குடி மாநகராட்சி ஆவதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக் கிறது. மேலும் தளக்காவூர், பாதரக்குடி, ஓ.சிறுவயல் ஊராட்சி பகுதிகளையும் இணைக்கலாம். காரைக்குடி நகராட்சியில் போதிய இடமின்றி அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, போக்கு வரத்துக்கழக மண்டல அலுவலகம், ஆவின் போன்ற முக்கிய அலுவலகங் களே சங்கராபுரம் ஊராட்சியில் உள்ளன. இதனால் காரைக்குடி நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கிராமப்புற மக்கள் அதிகமாகக் குடியேறிவருவதால் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப வசதிகளைச் செய்து கொடுக்க மாநகராட்சியாக ஆக்கினால் மட்டுமே சாத்தியம் ஆகும். காரைக்குடியை மாநகராட் சியாக்குவது என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு என்று கூறினார்.தொழில் வணிகக்கழக தலைவர் சாமி திராவிடமணி கூறியதாவது:

காரைக்குடியை மாநகராட்சியாக்க தரம் உயர்த்துவதன் மூலம் நகரின் உள் கட்டமைப்பு அதிகரிக்கும். சாலை, தெருவிளக்கு, பூங்கா, நடைமேடை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். மேம்பாலங்கள், வட்டச் சாலைகள் அமைக்கப்படும். மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி நிதியும் கிடைக்கும். காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தினால் சுற்றுலாப் பயணிகள் வரு கையும் அதிகரிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x