Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

தனி மனித முன்னேற்றத்துக்கு பாடுபடுவோம்: பாரதியார் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி உறுதி

பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பன்னாடு பாரதி திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டு, சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருதை வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

சென்னை

பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்பஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சென்னையில் செயல்படும் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாள் விழா நேற்று இணையவழியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதனுக்கு ‘பாரதி விருது' வழங்கினார். முதல்வர் பழனிசாமி, அமைச்சர் க.பாண்டியராஜன், வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே.ரவி உள்ளிட்டோர் இணையவழியில் விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், போராட்டக்காரர், பெண்ணியவாதி, சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகம் கொண்டவர் பாரதி. எனது தொகுதியான வாரணாசியோடு பாரதியார் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதில் பெருமை அடைகிறேன்.

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்றார்.

புதுமையையும், பழமையையும் இணைத்து நாட்டை முன்னேற்ற விரும்பினார். இதனை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

தமிழ் மொழியும், தாய் நாடும் அவரது இரு கண்களாக இருந்தன. ‘இனியொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம், தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார். அந்த விதியை இப்போது நாம் உருவாக்குவோம். ஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். ஒவ்வொரு குடிமகனும் பாரதியாரின் படைப்புகளை படித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

பாரதியின் ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘இனியொரு விதி செய்வோம்’ ஆகிய பாடல் வரிகளை பிரதமர் தமிழிலேயே கூறினார்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தனது உரைகளில் பாரதியார், திருவள்ளுவரை அதிகமாக மேற்கோள் காட்டி பேசும் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி. தமிழகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் தனக்கென தனி இடம் பிடித்தவர் பாரதி. அவரது படைப்புகளில் நாட்டுப்பற்று, தெய்வீகம், அன்பு,அறிவு, காதல், பக்தி, புரட்சி, கருணை, தியானம், யோகம், கலைகள், அரசியல், வேதாந்தம், இதழியல் என பல உன்னத மனித உணர்வுகள் மிளிர்ந்தன.

எம்ஜிஆர் ஆட்சியில் பாரதியார் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த இல்லம் அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

வானவில் பண்பாட்டு மையம் சார்பில் திருவல்லிக்கேணி பாரதிஇல்லத்தில் நடந்த ஜதி பல்லக்குநிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மயிலாப்பூர் எம்எல்ஏஆர்.நடராஜ் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x