Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

மழை மற்றும் குற்ற நிகழ்வுகள் நீங்கி அமைதி வேண்டி போலீஸார், பொதுப்பணித்துறையினர் குமாரகோயிலுக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன்

தக்கலை காவல் நிலையத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி குமாரகோயிலுக்கு நேர்த்திக்கடனாக காவடி எடுத்து சென்ற போலீஸார்.

நாகர்கோவில்

மழை பொழிந்து விவசாயத்தில் நல்ல மகசூல் பெறவேண்டியும், குற்ற நிகழ்வுகள் நீங்கி அமைதி நிலவ வேண்டியும், போலீஸார் மற்றும் பொதுப்பணித்துறையினர் தக்கலையில் இருந்து குமாரகோயில் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து பவனியாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆண்டுதோறும் மழை பொழிந்து விவசாயம் செழித்து நல்ல மகசூல் பெறவேண்டியும், குற்ற நிகழ்வுகள் குறைந்து சட்டம் ஒழுங்கு சீராகி மக்கள் அமைதியாக வாழவேண்டியும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவல்துறையினர், பொதுப்பணித் துறை நீர்ஆதார பிரிவினர் சார்பில், குமாரகோயில் வேளிமலை முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துபவனியாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே நடைபெறும் இந்நிகழ்வு, நடப்பாண்டு நேற்று நடைபெற்றது. காவல்துறையினரும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் விரதம்இருந்து காவடி எடுத்துச் சென்றனர்.

சமூக இடைவெளியுடன் நடந்த இந்த காவடி ஊர்வலத்தில் பறக்கும்காவடி, வேல்காவடி, புஷ்ப காவடிஆகியவை இடம்பெற்றன. தக்கலை காவல் நிலையத்தில் இருந்து போலீஸார் எடுத்து சென்ற காவடி ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட அமர்வு நீதிபதி எழில்வேலன், தக்கலை டி.எஸ்.பி.(பொ) பீட்டர், குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி, பயிற்சி ஏ.எஸ்.பி.க்கள் சாய்பிரமித், வடிவேல், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.

இதுபோல், தக்கலை பொதுப் பணித்துறை நீர்வள ஆதார பிரிவு சார்பில் நடந்த காவடி ஊர்வல நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் அருள்சன் பிரைட் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

காவடி ஊர்வலத்துடன் பத்மநாபபுரம், திருவிதாங்கோடு, பிரம்மபுரம், முட்டைக்காடு, குமாரபுரம், இரணியல், ராமன்பரம்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காவடி எடுத்து பவனியாக சென்றனர்.

குமாரகோயில் முருகன் கோயிலை காவடி பவனி அடைந்ததும் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x