Last Updated : 10 Dec, 2020 05:04 PM

 

Published : 10 Dec 2020 05:04 PM
Last Updated : 10 Dec 2020 05:04 PM

விவசாயிகள் போராட்டம்; பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன?- புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி

பஞ்சாப் மாநிலத்தவர் அதிகமாகப் பங்கேற்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன என்று புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடதுசாரிக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்-எல்) தலைவர்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, இடதுசாரிகள் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் அளித்த பேட்டி:

"புயல் பாதிப்பு தொடர்பாக மத்தியக் குழுவும் முழுமையாக ஆய்வு நடத்தாமல் பெயருக்கு மட்டுமே ஆய்வு செய்துள்ளது. காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாகூர், மண்ணாடிப்பட்டு போன்ற இடங்களில் மழைநீரால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணம் தரவேண்டும்.

சென்டாக் மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. மருத்துவப் படிப்பு இடங்களுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறி வைக்கின்றனர். இதில் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அதிக அளவில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன?

புதுச்சேரியிலும் இடதுசாரிகள் அணி வரும் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். எங்கள் ஆதரவுடைய அணியே வெல்லும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்துறை தனியார்மயம் - விசாரணை தேவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், "புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமைச்செயலர் அஸ்வினி குமார் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளது. தனியார் மயமாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசின் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பாமல் புதிய கோப்பை அனுப்பியுள்ளனர்.

மின்துறைக்குப் புதுச்சேரியில் ரூ.1,500 கோடி அசையா சொத்தும், ரூ.800 கோடி டெபாசிட்டும் உள்ளது. அதனால் தனியார் மயமாக்கத்தில் இருவருக்கும் சொந்த லாபம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x